தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி மாணவ-மாணவிகள் சாலை மறியல்

சுந்தரேசபுரத்தில் உள்ள தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-27 23:00 GMT
விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம், சுந்தரேசபுரம் கிராமத்தில் 1965-ம் ஆண்டு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியை நரியங்குழி கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் (வயது 95) என்பவர் நடத்தி வந்தார். இதையடுத்து பொதுமக்கள் அவரிடம் பள்ளியை அரசே எடுத்து நடத்த வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு தர்மலிங்கம் ஒப்புகொண்டார். இதற் கிடையே தர்மலிங்கம் குடும்பத்தை சேர்ந்தவர்கள்பள்ளியை அரசு எடுத்து நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை அரசேஏற்று நடத்த வேண்டும் என கூறி விக்கிரமங்கலத்தில் தா.பழூர்- அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சாலை மறியலை கைவிடவில்லை. இதையடுத்து தகவல் அறிந்து வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, தா.பழூர் உதவி தொடக்க கல்வி அதிகாரி கலியபெருமாள், சுத்தமல்லி வருவாய் ஆய்வாளர் விமலா ஆகியோர் அங்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் தா.பழூர்-அரியலூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்துபாதிக்கப் பட்டது. பள்ளி கட்டிடம் சேதமடைந்து உள்ளதால் தற்போது பள்ளி அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. 

மேலும் செய்திகள்