5.84 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள்

நாமக்கல் மாவட்டத்தில் 5.84 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்கும் அல்பென்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்தார்.

Update: 2018-02-27 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள காதப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் 1 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு குடற்புழு நீக்கும் அல்பென்டசோல் மாத்திரைகள் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு தலைமை தாங்கிய கலெக்டர் ஆசியா மரியம், பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் அல்பென்டசோல் மாத்திரைகளை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்ற வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு 1 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு குடற்புழு நீக்கும் அல்பென்டசோல் மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்த குடற்புழு நீக்க மருந்து குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கற்கும் திறன் அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

குழந்தைகள் வெளியில் காலணி இல்லாமல் செல்வது, திறந்த வெளியில் மலம், ஜலம் கழிப்பது போன்றவற்றால் குழந்தைகளின் கால்களின் மூலமாக கிருமிகள் சென்று வயிற்றில் புழுக்களாக உருவாகி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த குடற்புழு தாக்கத்தினால் குழந்தைகளின் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்பட்டு குழந்தைகள் சோர்வடைந்து விடுவதோடு பல்வேறு நோய் தொற்றுகளுக்கும் ஆளாகின்ற நிலைமை ஏற்பட்டு விடுகின்றது.

இதனை தடுப்பதற்கு 1 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களின் மூலமாக குடற்புழு நீக்க மருந்துகளும், அதற்கு மேல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு குடற்புழு நீக்கும் அல்பென்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரையுள்ள 5 லட்சத்து 84 ஆயிரத்து 575 பேருக்கு குடற்புழு நீக்கும் அல்பென்டசோல் மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தங்களை எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. உணவு உண்பதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவுவதால் பல்வேறு நோய் தாக்கங்கள் முற்றிலும் தடுக்கப்படுகின்றன.

முன்னதாக அங்கன்வாடி பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் குடற்புழு நீக்க விழிப்புணர்வு கையேடு மற்றும் துண்டு பிரசுரங்களை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

இந்த முகாமில் எர்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். இதில் துணை இயக்குனர்(சுகாதாரப்பணிகள்) டாக்டர் ரமேஷ்குமார், உதவி இயக்குனர் நக்கீரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சவிதா உள்பட மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பணியாளர்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் காதப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்