லாரியில் இருந்த இரும்பு தகடு வெட்டியதில் வாலிபர் பலி

லாரியில் இருந்த இரும்பு தகடு வெட்டியதில் வாலிபர் பலியானார்.

Update: 2018-02-27 23:00 GMT
கும்மிடிப்பூண்டி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்த அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் சாம்ராஜ் (வயது 21). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சைதாப்பேட்டையில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சாம்ராஜ், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே சிறுவாடா கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் வேலை விஷயமாக சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார்.

சத்யவேடு-கவரைப்பேட்டை சாலையில் குருத்தானமேடு கிராமத்தின் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது அதே திசையில் 4 மீட்டர் நீளத்திற்கு இரும்பு தகடை வெளியே நீட்டியவாறு அபாயகரமாக ஏற்றிச்சென்ற ஒரு மினிலாரி திடீரென சிக்னல் எதுவும் செய்யாமல் சாலையின் இடதுபுறமாக திரும்பியது.

லாரி திடீரென திரும்பியதால், அதில் ஏற்றிச்செல்லப்பட்ட இரும்பு தகடு பின்னால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் சாம்ராஜின் கழுத்தை வெட்டியது.

இதில் கழுத்து அறுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சாம்ராஜ் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்துக்கு காரணமான டிரைவர் மினிலாரியை சம்பவ இடத்தில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்