திருவாரூர்-தஞ்சை நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி வர்த்தக-சேவை அமைப்புகள் சார்பில் போராட்டம்

திருவாரூர்-தஞ்சை தேசிய சாலையை சீரமைக்க வலியுறுத்தி திருவாரூரில் தி.மு.க., வர்த்தக-சேவை அமைப்புகள் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-02-27 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்வெண்ணியில் இருந்து நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர் வழியாக ஆண்டிப்பாளையம் வரையில் 35 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை முற்றிலுமாக சேதமடைந்து அதிக விபத்துகள் நடைபெற்று வருவதுடன் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை புகார் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சாலையை உடனடியாக சீரமைக்க கோரியும் மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு வர்த்தக-சேவை அமைப்புகள் ஆதரவு தெரிவித்தது.

அதன்படி நேற்று திருவாரூர் கல்பாலத்தில் மன்னார்குடி, தஞ்சை, கும்பகோணம் சந்திப்பு சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார்.

ஆடலரசன் எம்.எல்.ஏ., வர்த்தகர் சங்க தலைவர் பாலமுருகன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, திருவாரூர் வளர்ச்சி ஆலோசனை குழுமத்தின் செயலாளர் டாக்டர் செந்தில், தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் தேவா, கலியபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் தியாகபாரி உள்பட பல்வேறு சங்கங்கள், சேவை அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், ராஜா உள்பட ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து உதவி கலெக்டர் முத்துமீனாட்சி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்க மறுத்ததுடன் மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து உறுதியளித் தால் தான் மறியல் போராட்டத்தை கைவிடப்படும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து நாளை(அதாவது இன்று) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்ததால் மறியலில் ஈடுபட்ட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தினால் திருவாரூர்-தஞ்சை சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் திருவாரூர் நகரமே ஸ்தம்பித்தது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக சங்கத்தினர் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று வர்த்தக சங்கம் சார்பில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதி, காய்கறி மார்க்கெட், நகைக்கடை சந்து ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதே போல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவாரூரில் லாரிகள் அனைத்தும் ஓடவில்லை. இதனால் 350 லாரிகள் பணிமனையில் நிறுத்தப்பட்டது. இதே போல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோக்களும் ஓடவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தியும், தஞ்சாவூர் முதல் நீடாமங்கலம் பகுதி வழியாக நாகப்பட்டினம் வரையிலான இருவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நீடாமங்கலம் மேம்பாலம் பணியை தொடங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வர்த்தகர் சங்கத்தினர் நேற்று நீடாமங்கலம் அண்ணா சிலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்திற்கு தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சித்தமல்லி சோமசுந்தரம் தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, மாயவநாதன், அன்பரசன், தெட்சிணாமூர்த்தி, தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் தி.முக. நகர செயலாளர்கள் ஆர்.ராஜசேகரன், சிவநேசன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் நீலன். அசோகன், வர்த்தகர் சங்க தலைவர் ராஜாராமன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராணிசேகர் மற்றும் வர்த்தகர்கள், ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 300 பேர் சாலை மறியலில் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்குழுவினர் கோஷங்களையும் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 300 பேரை நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீடாமங்கலம் நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. 

மேலும் செய்திகள்