ஜெயலலிதா பிறந்தநாள் விழா: உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

ஜெயலலிதா பிறந்தநாள் விழா அன்று உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2018-02-27 22:00 GMT
உடுமலை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24-ந்தேதி அன்று உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு அ.தி.மு.க. சார்பில் தங்கமோதிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 24-ந்தேதி 4 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் என்று 6 குழந்தைகள் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்தன. இந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் விழா திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உடுமலை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்தது. அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எம்.கண்ணாயிரம் வரவேற்று பேசினார். அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அதிகாரி(பொறுப்பு) டாக்டர் முருகன், டாக்டர் ஜோதிமணி ஆகியோர் முன்னிலைவகித்தனர். நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.

மேலும் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் சுமார் 200 பேருக்கு ரொட்டி, பழம் ஆகியவற்றையும் அமைச்சர் வழங்கினார். விழாவில் முன்னாள் அரசு வக்கீல் மனோகரன், அரசு வக்கீல்கள் கே.ராமகிருஷ்ணன், எம்.வேலுமணி, அ.தி.மு.க. நகர அவைத்தலைவர் எம்.முருகவேல், பொதுக் குழு உறுப்பினர் யு.ஜி.கே.சற்குணசாமி, பி.சிதம்பரம், கண்ணன், தனலட்சுமி, விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை குட்டைத்திடலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். அ.தி. மு.க. மேலவை பிரதிநிதி குணசேகரன் வரவேற்றார். நாச்சிமுத்து, சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்