மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் பள்ளி மாணவன் பலி

பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2018-02-27 22:00 GMT
பல்லடம்,

பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 37). இவர் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கீதா(30). இவர்களின் மகன்கள் திவாகரன்(15), பிரசாத்(9).

பல்லடம்-மங்கலம் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் பிரசாத் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று காலை பிரசாத் தனது மாமா மகாலிங்கத்துடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றான். கரையாம்புதூர் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற அரசு பஸ் மகாலிங்கத்தின் மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரசாத் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். மகாலிங்கம் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் மாணவன் பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்