நட்பின் அடையாளமா?

தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

Update: 2018-02-27 09:01 GMT
ஜெயலலிதா அரசியல் வாழ்வு நெருப்பு ஆற்றை நீந்தி கடப்பதை போன்றே அமைந்தது. சவால் மிகுந்த அரசியலில் தனியொரு பெண்ணாக தன்னம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போட்டு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர். அவரின் அரசியல் வாழ்வில் சந்தித்த எண்ணற்ற சோதனைகளையும், சாதனைகளாக மாற்றி காட்டியவர்.

1981-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க.வுக்கு அழைத்து வரப்பட்ட ஜெயலலிதா, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு 1984-ம் ஆண்டு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். தனது சரளமான ஆங்கில உச்சரிப்பால், அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியை கவர்ந்தார். இவருக்கு பாராளுமன்றத்தில் 185-வது இருக்கை அளிக்கப்பட்டது. இந்த இருக்கையில் தான் அறிஞர் அண்ணா எம்.பி.யாக இருந்தபோது அமர்ந்திருந்தார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து முடக்கப்பட்ட ‘இரட்டை இலை’ சின்னத்தையும், கட்சியையும் மீட்டு 1989-ம் ஆண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆனார். அதன் பின்னர் வந்த தேர்தலில் தனி அணியாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.க்களுடன் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்திருந்தார். அப்போது ஜெயலலிதா தனக்கு சரி என கருதிய கருத்துகளை எடுத்துரைக்க தவறியதே இல்லை.

1991-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்-அமைச்சர் பதவியேற்ற ஜெயலலிதா, பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். தொட்டில் குழந்தைகள் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், ஏழை பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், கர்ப்பிணி பெண்களுக்கான திட்டங்கள் மக்களை வெகுவாக கவர்ந்தன.

1996-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் எதிர்க்கட்சிகள் இவர் மீது பல வழக்குகளை தொடுத்தன. அந்த வழக்குகளை எல்லாம் தைரியமாக எதிர்க்கொண்டு, தைரிய லட்சுமியாக வலம் வந்தார். வழக்கின் தீர்ப்பு காரணமாக 2 முறை பதவியை இழந்த ஜெயலலிதா, மீண்டும் பதவியேற்று கொண்ட நிகழ்வுகளும், மக்கள் செல்வாக்கு காரணமாக அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த வரலாறும் அரங்கேறிஇருக்கின்றன.

பல குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் அவரை பின்தொடர்ந்தாலும் 6 முறை (1991, 2001, 2011, 2016, மற்றும் 2 முறை கோர்ட்டு தீர்ப்பு காரணமாக பதவியை இழந்து, மீண்டும் பதவியேற்றுக்கொண்டது) முதல்-அமைச்சர் பதவியை அலங்கரித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்காது என்ற சரித்திரத்தை மாற்றி 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வென்று, மீண்டும் முதல்-அமைச்சர் ஆனார். எம்.ஜி.ஆரை போன்றே ஆட்சியை பிடித்தபோதும், அவரால் தொடர்ந்து ஆட்சியை நடத்த முடியாத அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி காலமானார்.

தமிழகத்தில் அதிக முறை ஆட்சியை பிடித்தவர் என்ற பெருமைக்குரிய சிறப்பை ஜெயலலிதா பெற்ற போதும், அவரின் இறப்புக்கு பிறகு வழங்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு அவரின் புகழுக்கு களங்கமாகவே பார்க்கப்பட்ட போதிலும், இந்த தீர்ப்பு மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் புகழை கொஞ்சம் கூட குறைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இறப்புக்கு பிறகும் அவர் மீதான எதிர்ப்பு அரசியல் தமிழக அரசியல் களத்தில் வலம் வந்த வண்ணமாக உள்ளது. அந்தவகையில், பலத்த எதிர்ப்புக்கு இடையே சட்டசபையில் அவரது படம் வைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைகளுக்கும், போராட்டங்களுக்கும் இடையே அரசியல் வாழ்வில் வெற்றி வாகை சூடி, மக்களின் மனம் கவர்ந்த தலைவராக வலம் வந்த ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அறிவித்த மானிய விலையிலான அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடியே நேரில் வந்து தொடங்கி வைத்திருப்பது அ.தி.மு.க.வினருக்கும், அவரை நேசிப்பவர்களுக்கும் மகிழ்ச்சியை தந்தாலும், இதுவும் விவாத பொருளாக மாறி விட்டது.

ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் குறிப்பிட்டு இருப்பது விவாதமாகி வரும் நிலையில், மாநில அரசு விழாவில் பிரதமர் பங்கேற்பதில் தவறு இல்லை என்ற கோஷமும் ஒலிக்க தொடங்கியிருக்கிறது.

அ.தி.மு.க.வினரை பொறுத்தவரையில் நட்புக்கு பெருமை சேர்க்க பிரதமர் வருகை அமைந்து விட்டதாக பெருமை பொங்கு கிறார்கள். இந்த விழா நட்புக்கு பெருமை சேர்த்ததா? ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்த்ததா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதே நேரத்தில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை குறி வைத்தே பிரதமரின் வருகை அமைந்ததாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும் மறுப்பதற்கில்லை. எது எப்படி இருந்தாலும் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளது மட்டும் திண்ணம்.

-தனிஷ்

மேலும் செய்திகள்