திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கம் திட்டத்தின் பயனாளிகளுக்கு தங்கம் வழங்கப்பட்டன

திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கம் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பிலான தங்கம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன

Update: 2018-02-26 22:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலத்துறையின் சார்பில், தமிழக அரசின் சிறப்புத்திட்டங்களுள் ஒன்றான ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன், திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வி முடித்த 100 பயனாளிகளுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக தலா 8 கிராம் தங்கமும், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவியும், கல்லூரி படிப்பு முடித்த 100 நபர்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக தலா 8 கிராம் தங்கமும், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவியும் என மொத்தம் 200 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான 1,600 கிராம் தங்கமும், ரூ.75 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவியும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், மருதராஜா எம்.பி. ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் சாந்தா நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கம் திட்டத்தில் 4 கிராமாக வழங்கி வந்ததை 8 கிராமாக உயர்த்தி பெண்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைக்கும் திட்டமாக தமிழக அரசு இத்திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. பெண் கல்வியினை ஊக்குவிக்கும் வகையில், 10, 12–ம் வகுப்பு படித்தவர்களுக்கும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் இதுபோன்ற திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) பூங்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்