மாநில கபடி போட்டி: ஆண்கள் அணியில் சேலம் முதல் இடம் பெண்கள் பிரிவில் திண்டுக்கல் வெற்றி

மாநில கபடி போட்டியில் ஆண்கள் அணியில் சேலம் முதல் இடம் பிடித்தது. பெண் பிரிவில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.

Update: 2018-02-26 23:00 GMT
கரூர்,

முதல்–அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் கடந்த 24–ந்தேதி தொடங்கியது. போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவில் தலா 32 அணிகள் பங்கேற்றன. இறுதிபோட்டி நேற்று மாலை தொடங்கி நடந்தது.

இதில் ஆண்கள் பிரிவில் கரூர் அணியும், சேலம் அணியும் மோதின. முதலில் கரூர் அணி புள்ளிகளை பெற்று முன்னிலையில் இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் சேலம் அணி வீரர்கள் அருமையாக ஆடி புள்ளியை பெற்று கரூரை முந்தினர். பரபரப்பாக நடந்த போட்டியில் இறுதியில் சேலம் அணி, கரூர் அணியை 44–க்கு 28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது.


இதேபோல பெண்கள் பிரிவில் திண்டுக்கல் அணியும், ஈரோடு அணியும் மோதின. இதில் இரு அணி வீராங்கனைகளும் ஆக்ரோ‌ஷமாக விளையாடினர். மாறி, மாறி புள்ளிகள் பெற்று போட்டியை விறுவிறுப்பாக்கினர். கடைசி 5 நிமிட போட்டியில் புள்ளிகள் பெறுவதில் தீவிரமாக ஆடினர். ஆனால் இறுதியில் திண்டுக்கல் அணி, ஈரோடு அணியை 38–க்கு 37 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணியினர் ஒரு புள்ளி வித்தியாசத்தில் முதல் இடத்தை தழுவினர். இறுதிப்போட்டிகளை காண பார்வையாளர்கள் நேற்று ஏராளமானோர் வந்திருந்தனர். மைதானத்தில் பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதியது. பரபரப்பாக நடந்த 2 இறுதிப்போட்டிகளை பார்வையாளர்கள் பலத்த கைத்தட்டியும், சத்தம் எழுப்பியும் வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்.


முன்னதாக இறுதி போட்டி நிகழ்ச்சியில் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் பிரிவு போட்டியை தொடங்கி வைத்தார். இதேபோல ஆண்கள் பிரிவு போட்டியை போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். போட்டிகள் முடிந்ததும் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் ஆண் பிரிவில் முதல் இடம் பிடித்த சேலம் அணி வீரர்கள் 12 பேருக்கு தலா ரூ.1 லட்சம் என ரூ.12 லட்சமும், 2–ம் இடம் பிடித்த கரூர் அணி வீரர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் என ரூ.9 லட்சமும், 3–ம் இடம் பிடித்த கடலூர் அணி வீரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் என ரூ.6 லட்சமும் வழங்கப்பட்டன. மேலும் 3 அணிகளுக்கும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.

அமைச்சர்கள் பரிசு வழங்கினர்


இதேபோல பெண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த திண்டுக்கல் அணிக்கு ரூ.12 லட்சமும், 2–ம் இடம் பிடித்த ஈரோடு அணிக்கு ரூ.9 லட்சமும், 3–ம் இடம் பிடித்த நாமக்கல் அணிக்கு ரூ.6 லட்சமும், 3 அணிகளுக்கு பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன. பரிசுகளை அமைச்சர்கள் பாலகிருஷ்ணாரெட்டி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர். பரிசளிப்பு விழாவில் கலெக்டர் (பொறுப்பு) சூர்யபிரகாஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் கபடி சங்க நிர்வாகிகள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், ‘‘இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக பரிசுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2013–ம் ஆண்டு ஜெயலலிதா தொடங்கி வைத்த இந்த போட்டி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் சமீபத்தில் ரூ.8 கோடியே 2 லட்சம் பரிசு தொகையை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியிருந்தார். தொடர்ந்து விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது’’ என்றார்.


மாநில கபடி இறுதி போட்டியை காண பார்வையாளர்கள் குவிந்ததால் கூட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. கேலரியை தாண்டியும், வீரர்கள் விளையாடும் இடம் அருகே வரை வந்து நின்றனர். சிலர் தரையில் அமர்ந்தனர். போலீசார் பார்வையாளர்களை தள்ளிச்செல்ல கூறிய போது சிலர் சத்தம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. பார்வையாளர்களை போலீசார் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தினர்.

மேலும் செய்திகள்