பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதியது கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் சாவு

சத்தியமங்கலம் அருகே பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-02-26 22:00 GMT
பங்களாப்புதூர்,

பங்களாப்புதூர் டி.ஜி.புதூரை அடுத்து உள்ள ஏழூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. அவருடைய மகன் சக்திவேல் (வயது 34). அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் ஸ்ரீதர் (18). ரங்கசாமி மகன் மகேந்திரன் (18). சக்திவேல், ஸ்ரீதர், மகேந்திரன் ஆகிய 3 பேரும் நண்பர்கள் ஆவர். இதில் சக்திவேலும், ஸ்ரீதரும் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்கள். மகேந்திரன் அந்த பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

சக்திவேல், ஸ்ரீதர், மகேந்திரன் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு ஏழூரில் இருந்து நால்ரோட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள். மோட்டார்சைக்கிளை சக்திவேல் ஓட்டினார். மற்ற 2 பேரும் அவருக்கு பின்னால் உட்கார்ந்து இருந்தார்கள். ஏழூர் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் நிறுத்தத்தில் அரசு டவுன் பஸ் பயணிகளை இறக்கி விட்டு புறப்பட தயாராக இருந்தது. எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் அவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் மோட்டார்சைக்கிளின் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது. அதேபோல் பஸ்சின் பின்புற பகுதியும் சேதமானது. இந்த விபத்தில் சக்திவேலும், ஸ்ரீதரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்கள். மகேந்திரன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மகேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.

மேலும் சக்திவேல், ஸ்ரீதர் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்த 3 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்