குடும்பம் நடத்த வராததால் மனைவியை கழுத்தை இறுக்கி கொன்றேன்

குடும்பம் நடத்த மனைவி வராததால் கழுத்தை இறுக்கி கொன்றேன் என்று கைதான லாரி டிரைவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-02-26 22:45 GMT
பேட்டை,

நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூர் அருகே உள்ள சீதபற்பநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 32) லாரி டிரைவர். இவருடைய மனைவி பேச்சியம்மாள் (28). பேச்சிமுத்துவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக பேச்சியம்மாள் கோபித்துக் கொண்டு வடக்கு சங்கன்திரடு பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து பேச்சிமுத்து வடக்கு சங்கன்திரடில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார். அப்போது, கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பேச்சிமுத்து, பேச்சியம்மாளை கொலை செய்தார்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து பேச்சிமுத்துவை கைது செய்தனர். அவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், எனக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருந்தது. இது எனது மனைவி பேச்சியம்மாளுக்கு தெரிந்து விட்டது. அவர் என்னை கண்டித்தார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த பேச்சியம்மாள் தனது பெற்றோர் வீடான வடக்கு சங்கன்திரடுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி நான் பேச்சியம்மாள் வீட்டிற்கு சென்றேன். அங்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு அவரை அழைத்தேன். ஆனால் அவர் வர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் பேச்சியம்மாளை சேலையால் கழுத்தை இறுக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கொலை தொடர்பாக பேச்சிமுத்துவுக்கு உடந்தையாக அவரது நண்பர் ஒருவர் இருந்துள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்