சென்னை ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலைய சுவரில் பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்ற பெண்

சென்னை ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலைய சுற்றுச்சுவரில் பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

Update: 2018-02-26 23:00 GMT
அம்பத்தூர்,

சென்னை திருமங்கலம், திருவல்லீஸ்வரர் நகர், மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் நர்மதா நந்தகுமார் (வயது 39). இவர் எம்.ஏ. எம்.பில். பட்டதாரி. தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்து தற்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் ராஜன்சந்துரு என்பவருக்கு சொந்தமான இடத்தில் மேகராஜ் (35) என்பவர் இருசக்கர வாகன மெக்கானிக் கடை வைத்துள்ளார்.

ராஜன்சந்துரு, மேகராஜ் மற்றும் ஜான்சி ஆகியோர் தன்னிடம் அடிக்கடி பிரச்சினை செய்வதாகவும், கேலி செய்து மனஉளைச்சல் எற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் கூறி 2016-ம் ஆண்டு திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் நர்மதா புகார் செய்தார். பலமுறை புகார் செய்தும் அப்போது இருந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

எனவே தற்போது இன்ஸ்பெக்டர் முருகேசன் பணிபுரியும் ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்திற்கு நர்மதா ஒரு பாட்டிலில் பெட்ரோலுடன் வந்தார். போலீஸ் நிலையத்தின் சுற்றுச்சுவரில் பெட்ரோலை ஊற்றி தீவைக்க முயன்றார். அப்போது போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாரும், இன்ஸ்பெக்டர் முருகேசனும் இதைப்பார்த்து ஓடிவந்தனர்.

உடனே நர்மதாவை தடுத்துநிறுத்தி அவரை பிடித்து திருமங்கலம் போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்தனர். ஏற்கனவே நர்மதா அளித்த புகார் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் இருப்பதால், திருமங்கலம் போலீசார் நர்மதாவிடமும், அவர் ஏற்கனவே புகார் கூறிய மெக்கானிக் மேகராஜிடமும் விசாரணை செய்தனர்.

நர்மதா கூறும்போது, ‘நான் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் முருகேசன் இன்ஸ்பெக்டராக இருந்தபோது 2 வருடமாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கமிஷனர் அலுவலகம், அண்ணாநகர் துணை கமிஷனர் என பல அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இன்ஸ்பெக்டர் முருகேசன் நடவடிக்கை எடுக்காமல் மேகராஜுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதனால் அவர் தற்போது இன்ஸ்பெக்டராக உள்ள போலீஸ் நிலையத்திற்கு தீவைத்து எனது எதிர்ப்பை தெரிவிக்க நினைத்தேன்’ என்றார்.

போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் நிலையத்துக்கு பெண் ஒருவர் தீ வைக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்