வடமதுரை அருகே தென்னந்தோப்பில் பயங்கர தீ விபத்து

வடமதுரை அருகே தென்னந்தோப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 மரங்கள் எரிந்து நாசமானது. மேலும் அருகில் இருந்த வைக்கோல் படப்பும் சேதமடைந்தது.;

Update: 2018-02-26 22:00 GMT
வடமதுரை,

வடமதுரை ரெயில்நிலைய சாலை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 52). இவர் வடமதுரையில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு செங்குளத்துப்பட்டி பகுதியில் உள்ளது. நேற்று மதியம் 1 மணியளவில் இவரது தென்னந்தோப்பின் வெளிப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.

அப்போது காற்று பலமாக வீசியதால் தென்னந்தோப்புக்குள் தீ பரவியது. காய்ந்த செடி, கொடிகள் பற்றி எரிந்ததால் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதற்கிடையே தோட்டத்தின் அருகே விவசாயி முருகேசன் (46) என்பவர் அடைந்து வைத்திருந்த வைக்கோல் படப்பிற்கும் தீ பரவியது.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது முடியவில்லை. இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் பொதுமக்களுடன் சேர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும் தென்னந்தோப்பில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கருகின. அத்துடன் வைக்கோல் படப்பும் எரிந்து நாசமானது.

இதற்கிடையில் தீயை அணைக்க முயன்ற முருகேசன் மனைவி அமுதா மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த அஞ்சலை ஆகியோருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்