ரூ.148¾ கோடியில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள்

சங்கரன்கோவில், புளியங்குடி, திருவேங்கடம் பகுதிகளுக்கு ரூ.148¾ கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகளை, அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.

Update: 2018-02-26 22:30 GMT
சங்கரன்கோவில்,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி நகரசபை மற்றும் திருவேங்கடம் நகர பஞ்சாயத்து மற்றும் ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் நகரசபை பகுதிகளுக்கு ரூ.148¾ கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தொடக்க விழா சங்கரன்கோவிலில் நேற்று காலை நடந்தது.

குடிநீர் திட்டத்தின் நீர் ஆதாரமாக நெல்லை மாவட்டம் கொண்டாநகரம் அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறையால் அமைக்கப்பட உள்ள தடுப்பணைக்கு முன்னதாக நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வினியோகிக்கப்பட உள்ளது.

சங்கரன்கோவில் பகுதிகளுக்கு ஆற்று நீர் வழங்கும் வகையில் சங்கரன்கோவில் காந்திநகரில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியும், இந்திராநகர், பாரதிநகர் பகுதியில் 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கட்டப்பட உள்ளது.

இதில் சங்கரன்கோவில் பாரதிநகரில் கட்டப்பட உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்துகொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அருள்தாஸ், செயற்பொறியாளர் அழகப்பன், சங்கரன்கோவில் நகரசபை ஆணையாளர் தாணுமூர்த்தி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய துணை தலைவர் கண்ணன், சுகாதார அலுவலர் பாலசந்திரன், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், நெல்லை பேரங்காடி இயக்குனர் வேலுச்சாமி, இளைஞர் பாசறை அமைப்பாளர் முருகன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து காந்திநகர் நகராட்சி தொடக்க பள்ளியில் ரூ.7 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தையும் அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.

மேலும் செய்திகள்