ஒரே நாளில் 2 கடைகளில் பணம் திருட்டு

திசையன்விளையில் ஒரே நாளில் 2 கடைகளில் பணம் திருட்டு போனது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2018-02-27 04:15 IST
திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை மெயின் ரோட்டில் பேன்சி கடை நடத்தி வருபவர் அமரராஜன் (வயது 59). இவர் வழக்கம் போல் சனிக்கிழமை இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையை திறக்கவில்லை.

அதனை தொடர்ந்து நேற்று காலை அமரராஜனின் மகன் அல்பர்ட் கடையை திறந்தார். உள்ளே சென்று பார்த்த போது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தன. மேலும் கடையில் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அல்பர்ட் இதுபற்றி, திசையன்விளை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் வந்து, அங்கு பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

திசையன்விளை வாரச்சந்தை வளாகத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் சேர்மதுரை. நேற்று முன்தினம் இவரது கடையின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த பணத்தையும் திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை தொடர்ந்து திசையன்விளை பஜாரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் உருவப்படம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்