முதல்-அமைச்சர் முன்னிலையில் ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக தேவைப்படும் ரூ.40 கோடி வசூல் நிறைவடைந்து விட்ட நிலையில் அதற்கான ஒப்பந்தம் முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து ஆகும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

Update: 2018-02-26 22:15 GMT
விருதுநகர்,

விருதுநகரில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்காக ரூ.40 கோடி செலுத்தப்படவேண்டும். அதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கி உள்ளது. தமிழ் வளர்ச்சி மையம் மூலம் ரூ.2¼ கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தமிழ் மக்களும், தமிழ் அமைப்புகளும் இதற்காக நிதி உதவி செய்துள்ளனர். 60-க்கும் மேற்பட்ட அமைப்புகள் நிதி உதவி வழங்கி உள்ளன. 7 பள்ளி மாணவர்கள் நிதி உதவி செய்துள்ளனர்.

சிவகாசியை சேர்ந்த ஹயக்கிரீவர் பள்ளி மாணவர்கள் ரூ.2 லட்சம் வழங்கி உள்ளனர். அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ள நிலையில் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.39 கோடி செலுத்தினால் போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. எனினும் இதுவரை ரூ.40 கோடி வசூல் செய்யப்பட்டு தேவை நிறைவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் வழங்கப்பட்ட ரூ.1 கோடி நிதி ஹார்வர்டு பல்கலைக்கழக நிர்வாக குழுவிடம் சேர்ந்து விட்டது பற்றி தகவல் இல்லை. ஏனெனில் அரசியல் கட்சிகளிடம்இருந்து நேரடியாக நிதி வசூலை ஏற்றுக்கொள்வதா என்பது பற்றி பல்கலைக்கழக நிர்வாகக்குழு பரிசீலித்து வந்தது. மேலும் இந்திய நேரடி வரிவிதிப்பு ஆணையக்குழுவும் இதற்கு ஒப்புதல் தர வேண்டி இருந்தது. எனினும் தி.மு.க. வழங்கிய நிதி ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன். இதுவரை பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி விவர பட்டியல் வரவில்லை.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே சமஸ்கிருத இருக்கை உள்ளது. தற்போது தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பொறுப்பு சிங்கப்பூர் தமிழ் அறிஞர் அம்ரூத்விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ் இருக்கைக்கு 6 பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்வளர்ச்சி மையத்துடன் முதல்-அமைச்சர் முன்னிலையில் அடுத்து சில நாட்களில் கையெழுத்து ஆகும். ஹார்வர்டு பல்கலைக்கழகம் தவிர வேறு பல்கலைக்கழகங்களிலும் தமிழ் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ் சொற்களில் வேறு சொற்களை கண்டறிய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். தமிழில் இதுவரை 7½ லட்சம் சொற்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழில் பிறமொழி சொற்கள் என பல சொற்கள் புறம்தள்ளப்பட்டுவிட்டன. ஆங்கிலம் பல வேற்று மொழி சொற்களையும் ஏற்றுக்கொண்டு வளர்ந்துள்ளது. தற்போது புதிய சொற்களை ஏற்பதற்காக சொற்குவை.காம் என்ற இணையதளத்தை கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி தொடங்கி உள்ளார். இது ஒரு புதிய முயற்சி அகும். ஆனாலும் கடந்த காலங்களை போல் இந்த இணையதளத்தையும் தனிமனித உரிமையாக்கப்படாமல் அரசுடைமையாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

தமிழ் பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். 1000 ஏக்கர் நிலம் வழங்கினார். தற்போது அந்த பல்கலைக்கழகம் 850 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கே 600 ஏக்கர் நிலம் தான் உள்ளது. தமிழ் பல்கலைக்கழகத்தில் 50 சதவீதத்துக்கு மேலான துறைதலைவர்களின் பதவி காலியாக உள்ளது. தற்போது 23 பணியிடங்களில் துறைத்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் உள்ள காலி இடங்களை நிரப்ப பல்கலைக்கழக இணை வேந்தர் என்ற முறையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன்.

தமிழ் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறை என்றால் அதில் மட்டும் கவனம் செலுத்தி அத்துறையை செழுமை படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதே போன்று அரசின் தமிழ் வளர்ச்சி துறையிலும் உதவி இயக்குனர் பணி இடங்கள் காலியாக உள்ளன. அவற்றையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செந்தமிழ் கல்லூரி மற்றும் சைவமடங்கள் நடத்தி வரும் கல்லூரிகள் கலைக்கல்லூரிகளாக மாற்றப்பட்டு விட்டன. தமிழ் பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளை அதிகரிக்கவும் அந்த பல்கலைக்கழகத்திற்கு தேசிய பல்கலைக்கழக குழுவின் அங்கீகாரம் கிடைக்கவும், இளங்கலை வகுப்புகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்