அரசுப் பள்ளி மாணவர்கள் களஆய்வில் சீனநாட்டு பானை ஓடுகள் கண்டெடுப்பு

கீழக்கரை அருகே வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சீனநாட்டுப் பானைஓடுகளை கள ஆய்வில் கண்டெடுத்துள்ளனர்.

Update: 2018-02-26 22:00 GMT
கீழக்கரை,

கீழக்கரை அருகே உள்ள வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் முனியசாமி மாணவர்களுக்கு வரலாற்றுத் தடயங்கள் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார். இப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவர்கள் வினித், கவியரசன், யுவராஜ், விஷால், அருள்தாஸ் ஆகியோர் விடுமுறை நாட்களில் தங்கள் பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டு பழமையான தடயங்களைத் தேடியுள்ளனர்.

அப்போது மேலமடை, குளபதம் ஆகிய ஊர்களில் பச்சை, பளிங்கு நிற மணிகள், போர்சலைன், செலடன் வகை சீனநாட்டு பானைஓடுகள், பச்சைநிற கவண்கல், அரைப்புக்கல், இரும்புத் தாதுக்கள், சங்கு, சுடுமண் கெண்டியின் மூக்குப் பகுதி, மூடி, தீட்டுக்கல் ஆகியவற்றை கண்டெடுத்து அதை ஆசிரியர் முனியசாமியிடம் கூறியுள்ளனர்.

அவர் இதுபற்றி ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜகுருவுக்கு தகவல் தந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- குளபதம் தண்டூருணி பெரியதோப்பு திடலிலும், மேலமடையின் மேற்கே கிழவனேரி கள்ளித்திடல் பண்ணைக்குட்டை தோண்டிய இடத்திலும் மாணவர்கள் பழம்பொருட்களைக் கண்டெடுத்துள்ளனர். சீனநாட்டு போர்சலைன் வகை மண்பாண்டத்தில் வெள்ளை ஓட்டின் மேல் நீலநிறப்பூ போன்ற வடிவம் வரையப்பட்டுஉள்ளது.

வெள்ளை களிமண்ணால் உருவாக்கப்படும் இது உப்புப்பூச்சு மூலம் பளபளப்பாக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பாசிநிற களிமண்ணால் செய்யப்படும் செலடன் வகை மண்பாண்டங்களில் பச்சை, இளம்பச்சை, சாம்பல், பழுப்பு நிறங்கள் உண்டு. இதில் கிண்ணம், தட்டு போன்றவை செய்யப்படுகின்றன. இங்கு கிடைத்தது இளம்பச்சைநிறத்தில் உள்ள கிண்ணத்தின் அடிப்பகுதிஆகும்.

மாணவர்களின் உதவியோடு மீண்டும் அப்பகுதிகளில் களஆய்வு செய்தபோது இடைக்காலப் பானைஓடுகள் மட்டுமே காணப்பட்டன. சங்க கால கருப்பு சிவப்பு பானைஓடுகள் இல்லை. எனவே இப்பொருள்கள் வரலாற்றின் இடைக்காலமான கி.பி.12-13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறியமுடிகிறது.

ஏற்கனவே அழகன்குளம், தொண்டி, பெரியபட்டினம் உள்ளிட்ட பலஊர்களில் சீனநாட்டு பானைஓடுகள் கிடைத்துள்ளன. தற்போது கடற்கரை நகரமான கீழக்கரைக்கு மிகஅருகில் இவை கிடைத்துள்ளதன் மூலம் இப்பகுதிகளும் சீனாவுடன் நேரடி வர்த்தகத் தொடர்பில் இருந்துள்ளதையும், சீனநாட்டு வணிகர்கள் இங்கு வந்து சென்றுள்ளதையும் அறியமுடிகிறது. சீனமன்னருக்கும், பாண்டியருக்கும் நல்ல நட்புறவு நிலவிஉள்ளது. பாண்டியநாட்டு முத்துக்கு உலகம் முழுவதும் தேவை இருந்துள்ளது. சீனாவில் சூவான் சவ் எனும் துறைமுக நகரில் உள்ள சிவன் கோவிலில் கி.பி.13-ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டு உள்ளது. இது சீனர்- தமிழர் உறவுக்கு சான்றாக விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

வரலாற்றுத் தடயங்களை ஆர்வமுடன் தேடிக் கண்டெடுத்த மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் தமிழறிந்த பெருமாள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்