திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கியில் தொழில் கடன் வழங்க வேண்டும்

திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கியில் தொழில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-02-26 22:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மத்திய அரசின் ரூ.10 ஆயிரம் மானியத்துடன் ரூ.30 ஆயிரம், ரூ.40 அயிரம் என மாற்றுத்திறனாளிகளுக்கு சிறு தொழில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. பெட்டிக்கடை, சாலையோர காய்கறி கடை, சிறு ஆடைகள் விற்பனை செய்யும் கடை என மாற்றுத்திறனாளிகள் தங்களின் அன்றாட செலவுகளை ஈடு செய்து பிழைப்பு நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக விண்ணப்பித்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக சிபாரிசு கடிதங்கள் வழங்கப்பட்டும் எந்த வங்கியிலும் இதுவரை சிறு தொழில் கடன் வழங்கப்படவில்லை. மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்து தொழிற்கடன் கேட்டாலும் வங்கிகள் மெத்தனமாக உள்ளன. மத்திய அரசின் நிதி வந்தால் தான் கடன் கொடுப்போம் என்று வங்கி அதிகாரிகள் சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.

குறிப்பாக தாராபுரம் எலுகாம் வலசு, குள்ளந்தள்ளிவலசு ஆகிய பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை வங்கியில் கடன் கொடுக்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் சிபாரிசு கடிதம் பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மலரவன் அளித்த மனுவில், திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு ஒரு சுற்று நிறைவடைந்து விட்டது. கடும் வறட்சியாக இருப்பதால் முதலாம் மண்டலத்துக்கு கூடுதலாக 4 நாட்கள் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் முதலாம் மண்டலத்துக்கு இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் கிடைக்காமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 6 பேருக்கு தொழில் தொடங்க தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக ஒருவருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை என 8 பேருக்கு ரூ.3 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.

திருப்பூர் பகுதிகளில் உள்ள நைஜீரியர்கள் 5 பேர் கலெக்டரை சந்தித்து முறையிடுவதற்காக நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். குறைதீர்ப்பு கூட்டத்தில் கலெக்டர் இருந்ததால் மற்றொரு நாள் வந்து சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்குமாறு அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு நைஜீரியர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்