சிறுவாணி நீர் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்ட அவலம்: ஆழியாறு தண்ணீர் பிரச்சினையில் அதிகாரிகளின் குளறுபடி

கோவை மாவட்டம் ஆழியாறு அணை தண்ணீர் பிரச்சினைக்கு அதிகாரிகளின் குளறுபடி தான் காரணம் என்றும் அவர்கள் தவறான முன்உதாரணத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந் துள்ளது.

Update: 2018-02-26 22:00 GMT
கோவை,

மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலை குன்றுகளில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாயும் ஆறுகளான ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆறு, தூணக்கடவு ஆறு மற்றும் பெருவாரிபள்ளம் ஆறு ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் 30.50 டி.எம்.சி. நீரினை கிழக்கு நோக்கி திருப்பி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பாசனம் செய்யப்படுகிறது. மேலும் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.

இந்த திட்ட ஒப்பந்தப்படி மேல்நீராறில் இருந்து 9 டி.எம்.சி.யும், கீழ்நீராறில் 2.5 டி.எம்.சி.யும், சோலையாறில் 14.8 டி.எம்.சி.யும், பரம்பிக்குளம் தொகுப்பு அணைகளில் 14 டி.எம்.சி.யும், ஆழியாறில் 7.25 டி.எம்.சி.யும், (ஆழியாறுக்கும், மணக்கடவிற்கும் இடையே கிடைக்கும் மழைநீரில் 3 டி.எம்.சி.யும்) சேர்த்து 50.5 டி.எம்.சி கிடைக்கிறது. அதன்படி பி.ஏ.பி. பாசன திட்டத்தின்படி தமிழகத்துக்கு 30.5 டி.எம்.சி.யும், கேரளாவுக்கு 19.55 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்குவது என்று ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் கேரளாவுக்கு ஆழியாறு அணையிலிருந்து 7.25 டி.எம்.சி. தண்ணீர் தான் கொடுக்க வேண்டும்.

பி.ஏ.பி. பாசன திட்ட ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தில் 4.25 லட்சம் ஏக்கரும், கேரளாவில் 22 ஆயிரம் ஏக்கரும் நேரடியாக பயன்பெறுகின்றன. இதை தவிர கோவை, திருப்பூர் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த திட்டம் உள்ளது. நீர்பங்கீடு குறித்து 6 மாதங்களுக்கு ஒரு முறை தமிழக-கேரள மாநில அதிகாரிகளும் ஆய்வு கூட்டம் நடத்துவார்கள்.

அதன்படி கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி திருவனந்தபுரத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு வினாடிக்கு 400 கன அடி திறந்து விடுவதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி கேரளாவுக்கு கொடுக்கப்படும் தண்ணீர் பரம்பிக்குளம் அணையில் இருந்து ஆழியாறு அணைக்கு கொண்டு வந்து, மணக்கடவில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பின்னர் அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

ஆழியாறு அணையிலிருந்து முதலில் தண்ணீர் திறந்ததும், அதன்பின்னர் அதை நிறுத்தியதும், பின்னர் மீண்டும் திறந்ததற்கும் காரணம் அதிகாரிகள் செய்த குளறுபடிகள் என்று கூறுகிறார் ம.தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் வே.ஈஸ்வரன். அவர் மேலும் கூறியதாவது:-

பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின்படி ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனம், கேரள மாநிலம் சித்தூர் பாசன பகுதிகளுக்கு ஆழியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மட்டுமே தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் உள்ளது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி பரம்பிக்குளம் அணையில் இருந்து ஆழியாறு அணைக்கு கடந்த மாதம் 20-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்கு திருமூர்த்தி நீர்தேக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளாவுக்கு ஆழியாறு அணையில் தண்ணீர் இருந்தால் மட்டும் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கொடுக்க கூடாது என்று கூறி திருமூர்த்தி நீர்தேக்க பாசன விவசாயிகள் கடந்த மாதம் 22-ந் தேதி பி.ஏ.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதைத் தொடர்ந்து தமிழக அதிகாரிகள் கேரளாவுக்கு திறக்கும் தண்ணீரை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு திறக்கும் தண்ணீரையும் நிறுத்தி விட்டனர். இதற்கு ஆழியாறு பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 23-ந் தேதி போராட்டம் நடத்தினார்கள். அதிகாரிகளின் செயல்பாட்டினால் விவசாயிகளுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.

கேரளாவுக்கு தண்ணீர் நிறுத்தியதை தொடர்ந்து தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் வாகனங்கள் தமிழக-கேரள எல்லையில் நிறுத்தப்பட்டன. இதனால் வாகனங்கள் செல்வது தடைபட்டது. அதன்பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் கேரளாவுக்கு இயக்கப்பட்டன.

ஆழியாறு அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள அரசு சிறுவாணி நீரை பகடைக்காயாக பயன்படுத்தியது. சிறுவாணி தண்ணீரை தமிழகத்துக்கு கிடைக்காமல் செய்தால் ஆழியாறு அணையில் தமிழகம் தண்ணீர் திறந்து விடும் என்று நினைத்த கேரளா கடந்த 22-ந் தேதி முதல் கோவை மக்களின் குடிநீருக்காக சேமித்து வைத்திருந்த சிறுவாணி தண்ணீரை ஆற்றில் திறந்து வீணாக்கியது.

இதனால் செய்வதறியாது திகைத்த தமிழக அதிகாரிகள் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் பி.ஏ.பி. அணையிலிருந்து தண்ணீரை ஆழியாறு அணைக்கு கொண்டு வந்து கேரளாவுக்கு திறந்து விட்டனர். அதன்பின்னர் சிறுவாணியில் திறந்து விடும் தண்ணீரை கேரளா நிறுத்தியது.

இந்த குளறுபடிகளுக்கு தமிழக அதிகாரிகள் தான் முழு காரணம். கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்திலேயே ஆழியாறு அணையில் தண்ணீர் இல்லை என்று தமிழக அதிகாரிகள் கூறியிருக்க வேண்டும். தமிழக-கேரள ஒப்பந்தப்படி ஆழியாறு அணையில் தண்ணீர் இருந்தால் தான் கேரளாவுக்கு 7.25 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் உள்ளது.

ஆழியாறில் தண்ணீர் இல்லையென்றால் எந்த அடிப்படையில் அதிகாரிகள் தண்ணீர் எடுத்தனர். அதன்பின்னர் எந்த அடிப்படையில் தண்ணீரை நிறுத்தினார்கள். ஆழியாறு அணை பிரச்சினை வேறு. சிறுவாணி அணை பிரச்சினை வேறு. அடுத்த ஆண்டும் ஆழியாறில் தண்ணீர் இல்லையென்றால் பி.ஏ.பி.யில் இருந்து தண்ணீர் திறந்து விடுங்கள். இல்லையென்றால் சிறுவாணி தண்ணீரை பகடைக்காயாக பயன்படுத்தி அதை வீணாக திறந்து விடுவோம் என்று கேரளா மிரட்டும் நிலை ஏற்படும். இப்படி ஒரு தவறான முன்உதாரணத்தை தமிழக அதிகாரிகள் ஏற்படுத்தி விட்டனர். இத்தகைய நிலை தமிழக-கேரள மக்களுக்கு நல்லதல்ல. தொழில்நுட்ப அடிப்படையிலும், நீர் வரத்தை கணக்கிட்டும் தண்ணீர் திறந்து விடும் நிலை மாறி போராட்டம், தகராறு செய்தால் தண்ணீர் பெறலாம் என்ற தவறான நிலையை அதிகாரிகள் ஏற்படுத்தி விட்டனர்.

ஆழியாறு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறுவாணி தண்ணீரை திறந்து விட்ட கேரளா அந்த தண்ணீரை தமிழகத்துக்கு திருப்பி கொடுக்குமா?. ஆழியாறு அணையிலிருந்து ஏற்கனவே 5.50 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்கப்பட்டு விட்டது. தற்போது கடந்த 2 நாட்களாக வினாடிக்கு 450 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதன்படி பார்த்தால் ஏறக்குறைய ஒப்பந்தப்படி கேரளாவுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை இந்த ஆண்டு மே மாதத்திற்கு முன்பாகவே கொடுக்கப்பட்டு விட்டது.

ஆனால் பி.ஏ.பி. அணையிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுவதால் திருமூர்த்தி அணை பாசன விவசாயிகளுக்கு முதலாம் மண்டல பாசனத்தில் 2-வது சுற்றுக்கும் தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் கோடை காலத்தில் கோவை, திருப்பூர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்