கோவை மாவட்டத்தில் வேளாண், தொழில் நிறுவனங்களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு

கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் வேளாண்மை உள்ளிட்டவற்றுக்கு ரூ.18 ஆயிரத்து 243 கோடி கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையை கலெக்டர் ஹரிகரன் நேற்று வெளியிட்டார்.

Update: 2018-02-26 22:15 GMT
கோவை,

நபார்டு வங்கியின் 2018-19-ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் கலந்து கொண்டு கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. நிகழ் ஆண்டை காட்டிலும் வரும் ஆண்டிற்கான நிதி தேவை 8 சதவீதம் உயர்ந்திருப்பதை கருத்தில் கொண்டு, ரூ.18 ஆயிரத்து 243 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 44 சதவீதமும், வேளாண் மற்றும் அதன் இணை தொழில்களுக்கு 37 சதவீதமும், இதர தொழில்களுக்கு 19 சதவீதமும் வழங்கப்படும். நபார்டு திட்டத்தை அடிப்படையாக கொண்டே வங்கிகளுக்கான கடன் திட்டத்தை மாவட்ட முன்னோடி வங்கி தயாரிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் கனகராஜ், நபார்டு மாவட்ட வளர்ச்சி அதிகாரி வசீகரன், பல்லவன் கிராம வங்கி மண்டல மேலாளர் சந்திரன் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் வெங்கிடகிருஷ்ணன் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்