கோவையில் ஓடும் பஸ்சில் கண்டக்டர்-பெண் பயணி மோதல்

கோவையில் ஓடும் பஸ்சில் கண்டக்டர்-பெண் பயணி மோதிக்கொண்டதுடன், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-02-26 22:45 GMT
கோவை,

கோவையை அடுத்த மதுக்கரை மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 40). இவர் கோவையில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அவர் கோவை வருவதற்காக தனியார் பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் பொள்ளாச்சி வேடசந்தூரை சேர்ந்த செல்வராஜ் (35) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

அந்த பஸ் உக்கடத்தில் உள்ள பிரகாசம் பஸ்நிறுத்தத்தில் நிற்பதற்காக மெதுவாக சென்றது. அப்போது பஸ்சில் இருந்த ஹேமலதா பஸ்சை விட்டு இறங்குவதற்காக படிக்கட்டுக்கு வந்தார். அப்போது ஏன் படிக்கட்டில் நிற்கிறீர்கள் என்று செல்வராஜ் சத்தம் போட்டதாக தெரிகிறது. உடனே ஹேமலதா அவரை திட்டியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் சரமாரியாக ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த செல்வராஜ் திடீரென்று ஹேமலதாவின் கன்னத்தில் ஓங்கி அடித்ததாக தெரிகிறது. பதிலுக்கு அவரும் செல்வராஜை தாக்கி உள்ளார்.

ஓடும் பஸ்சில் கண்டக்டர், பெண் பயணி மோதிக்கொண்ட சம்பவம் அதற்குள் இருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, அந்த பஸ் பிரகாசம் பஸ்நிறுத்தத்தில் நின்றதும், பஸ்சை விட்டு இறங்கிய ஹேமலதா, திடீரென்று கண்டக்டர் செல்வராஜ் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு, உக்கடம் போலீஸ் நிலையத்தை நோக்கி ஓடினார். உடனே பின்னால் செல்வராஜூம் ஓடினார்.

பின்னர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற ஹேமலதா, அங்கிருந்த போலீசாரிடம், தனியார் பஸ் கண்டக்டர் தன்னை தாக்கியதால், அவர் வைத்திருந்த பணப்பையை பறித்து விட்டு வந்ததாக புகார் தெரிவித்தார். இதையடுத்து பின்னால் வந்த கண்டக்டர் செல்வராஜ், தன்னிடம் இருந்த பணப்பையை ஹேமலதா பறித்துவிட்டு வந்ததாக புகார் அளித்தார். அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்வதாக எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தாங்கள் தெரியாமல் செய்து விட்டதாகவும், புகார் கொடுக்க விரும்பவில்லை என்றும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சமரசமாக செல்கிறோம் என்று எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்