எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 5 ஆண்டுகள் பூர்த்தி செய்யும் குமரகுரு எம்.எல்.ஏ. பேச்சு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 5 ஆண்டுகள் பூர்த்தி செய்யும் என்று ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2018-02-26 21:30 GMT
திருக்கோவிலூர்,

முகையூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா என முப்பெரும் விழா ஆற்காடு கிராமத்தில் நடைபெற்றது. முகையூர் ஒன்றிய நிர்வாகியும், முன்னாள் திட்டக்குழு உறுப்பினருமான மாரங்கியூர் இளங்கோவன் தலைமை தாங்கினார். திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் ஏ.பி.பழனி, ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர் அருணகிரி, நகர செயலாளர் கே.சுப்பு, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏசுபாதம், அரசு வக்கீல் சங்கர், மாவட்ட இணை செயலாளர் பரசு ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கி பேசினார்.

ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. டி.டி.வி. தினகரன் தி.மு.க.வுடன் கைகோர்த்துக்கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை கலைத்துவிடலாம் என பகல் கனவு காண்கிறார். அது நடக்கவே நடக்காது. ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்ட காலத்தில் 55 ஆயிரம் வாக்குகள் வாங்கிய தி.மு.க. இடைத்தேர்தலில் அனைத்து கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் டெபாசிட் இழந்தது. தி.மு.க.வினர் டி.டி.வி. தினகரனுக்கு வாக்குகளை பதிவு செய்து விட்டனர். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான நிதி உதவி இருமடங்காக உயர்த்தியது, பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கியது போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 5 ஆண்டு கால ஆட்சியை பூர்த்தி செய்யும்.

எனவே அ.தி.மு.க.வினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எதிர் வர உள்ள உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க தேர்தல்களில் 100 சதவீதம் வெற்றி பெற தேவையான முன்னேற்பாடுகளை செய்திடவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், நாதன் காடுவெட்டி கிளை செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் தலைவர்கள் மஞ்சுளா துரை, தெய்வசிகாமணி, கிளை செயலாளர்கள் அந்தோணி பெர்லின், சிவலிங்கம், அமைப்பு சாரா அணி நிர்வாகி வெற்றி, மகளிரணி நிர்வாகி ஜோதியம்மாள், அ.தி.மு.க. பாசறை நிர்வாகி ஏழுமலை, சென்னகுணம் சீனுவாசன், மாவட்ட இணை செயலாளர் சரசு ரங்கநாதன், அரகண்டநல்லூர் பாலமுரளி, தென்னரசு, முருகன், கண்டாச்சிபுரம் ரவிச்சந் திரன், திருக்கோவிலூர் பகுதி நிர்வாகிகள் முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் செல்வராஜ், ஊராட்சி செயலாளர் அருணகிரி, தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் கண்ணன், வக்கீல் பிரிவு நிர்வாகி கே.உமாசங்கர், ஆற்காடு நிர்வாகிகள் முருகன், செல்வராஜ், குணசேகர், தாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நாதன்காடுவெட்டி சுபாஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்