லாரி-கார் நேருக்கு நேர் மோதல் 6 பேர் படுகாயம்

காட்பாடி அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்குள்ளான லாரி டயர்கள் கழன்று தனித்தனியாக ஓடின.

Update: 2018-02-25 22:30 GMT
காட்பாடி,

காட்பாடியை அடுத்த பரதராமியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 24), கார் டிரைவர். மகேஷ் மற்றும் அவருடைய உறவினர்கள் புருஷோத்தமன் (34), துர்காபிரசாத் (21), சம்பத் (25), நவீன் (25) ஆகியோர் காட்பாடிக்கு சென்று விட்டு நேற்று காலை பரதராமிக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். காட்பாடி-குடியாத்தம் சாலையில் உள்ள கரசமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே கார் வந்தபோது, குடியாத்தத்தில் இருந்து வேலூர் நோக்கி வந்த லாரியும், இவர்கள் சென்ற காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. லாரியின் டயர்களும் அதிலிருந்து கழன்று தனித்தனியாக ஓடின. இதில் காரில் பயணம் செய்த மகேஷ், புருஷோத்தமன் உள்பட 5 பேர் மற்றும் லாரியை ஓட்டி வந்த குடியாத்தத்தை சேர்ந்த டிரைவர் பன்னீர்செல்வம் (30) ஆகியோர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த லத்தேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து காரணமாக காட்பாடி-குடியாத்தம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுதொடர்பாக லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்