உலக நாடுகளின் ஆன்மிக மையமாக இந்தியா திகழ்கிறது - ஆரோவில் பொன்விழாவில் மோடி பெருமிதம்

உலக நாடுகளின் ஆன்மிக மையமாகவும், வழிகாட்டியாகவும் இந்தியா திகழ்ந்து வருகிறது என்று ஆரோவில் பொன்விழாவில் பிரதமர் மோடி கூறினார்.

Update: 2018-02-25 23:45 GMT
புதுச்சேரி,

புதுவை அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில் 50-வது ஆண்டு பொன்விழா நேற்று நடந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று காலை புதுவை வந்தார். அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டு விட்டு ஆரோவில் நகருக்கு பிரதமர் மோடி வந்தார். அங்கு அவருக்கு ஆரோவில் நிறுவன சேர்மன் கரண் சிங் தலைமையில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்குள்ள அரவிந்தர் சிலைக்கு மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்குள்ள மாத்ரி மந்திர் தியானக் கூடத்திற்கு சென்று பார்வையிட்டார். சிறிது நேரம் அங்கு தியானத்தில் ஈடுபட்டார். இதன்பின் பகல் 12.45 மணியளவில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு மோடி வந்தார்.

அங்கு நடந்த விழாவில் அரவிந்தர், அன்னை மற்றும் மாத்ரி மந்திர் படங்கள் அடங்கிய சிறப்பு தபால் தலையை மோடி வெளியிட்டார். ஒருங்கிணைந்த கல்வி புத்தகமும் வெளியிடப்பட்டது. ஆரோவில் இளைஞர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளின் சாவிகளை மோடி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆரோவில் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது தனிப்பட்ட யாருக்கும் சொந்தமான பகுதியல்ல. அனைத்து மனிதர்களுக்குமான ஒரு இடம். தூய்மையான எண்ணங்களுடன் இருப்பவர்கள் தான் இங்கு இருக்க முடியும். இது முடிவில்லா அறிவினை கற்பிக்கும் இடமாக உள்ளது. மனிதனை இளமை மாறாமல் பொலிவுடன் அமைதியாக வைத்திருக்கும் இடமாக உள்ளது. எதிர்காலத்தையும், இறந்த காலத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக உள்ளது.

இது கலாசாரம் மிகுந்த பகுதி, ஆன்மிகம், புதிய கண்டுபிடிப்புகள் என தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது.

அரவிந்தர், அன்னை ஆகியோரின் ஆன்மிக கொள்கைகள் அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த கொள்கைகள் மூலம் சிறந்த மனித நேயத்தை உருவாக்கி வருகிறது. இதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து கலாசாரங்களை கொண்ட ஒரு சர்வதேச நகரம் திட்டமிடப்பட்டுள்ளது. உலக நாடுகளின் ஆன்மிக மையமாகவும், வழிகாட்டியாகவும் இந்தியா திகழ்ந்து வருகிறது. நாளந்தா பல்கலைக்கழகமும், உலகின் பழமையான மதங்களும் இந்தியாவில் தான் தோன்றியுள்ளன. இதன் காரணமாக இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஆன்மிகம் கலந்துள்ளது.

நமது நாட்டு கலாசாரத்தின் அங்கம் யோகா. எனவே தான் ஜூன் 21-ந் தேதியை அகில உலக யோகா தினமாக ஐ.நா. அங்கீகரித்துள்ளது. மனிதர்களோ, பெண்களோ, குழந்தைகளோ பல நாடுகளை சேர்ந்தவர்களோ அனைவரின் ஒற்றை தத்துவம் மனிதநேயமாக உள்ளது. அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். உணர்வுபூர்வமாகவும், ஆக்கபூர்வ ஆராய்ச்சிகள் மூலமாகவும் மனித ஒற்றுமைக்கு இங்குள்ளவர்கள் பாடுபட்டு வருகின்றனர்.

ஆரோவில் சர்வதேச நகரம் 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது 124 நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது 49 நாடுகளை சேர்ந்த 2,400 பேர் வசித்து வருகிறார்கள். இதன் முக்கிய நோக்கம் மனிதநேய ஒருங்கிணைப்பு என்பதை தாண்டி உலகளாவிய அளவில் இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

இதைத்தான் நமது வேதங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு போதித்துள்ளன. இந்தியாவில் பல்வேறு மதங்கள் கலாசாரங்கள் இருந்த போதிலும் புரிந்துகொண்டு செயல்படுகின்ற தன்மை இதன் மூலம் தான் ஏற்படுகிறது.

வாழ்க்கை என்பது ஒரு பரிசோதனை கூடம். இதற்கு முடிவில்லை. ஆரோவில் நிர்வாகம் முடிவில்லா கல்வியை அனைத்து தரப்பினருக்கும் போதித்து வருகிறது. இதை அனைத்து பகுதிக்கும் கொண்டு சென்று சேர்க்கிறது. ஆரோவில்லில் 50 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மண் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. அது ஒரு நேர்மறையான ஆற்றலை தொடர்ந்து கொடுத்து வருகிறது.

பல்வேறு தலங்களில் தரமான கல்வி, முடிவில்லா கல்வி அனைத்து பகுதிக்கும் பரவ வேண்டும். அதற்கான முயற்சிகளை ஆரோவில் நிர்வாகம் தொடர்ந்து வருகிறது. இது மக்களிடையே இருக்கும் குறுகிய மனப்பான்மையை உடைக்கும் விதமாக உள்ளது. இது உலகிற்கு ஒரு முன்னுதாரமாக தொடர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்