எட்டுத் திக்கும் கொட்டும் இசை

“தமிழர்களின் முதல் இசை, பறை! முன்பு கைகளால் தப்பி (தட்டி) இசைத்ததால் தப்பு என்ற பெயர் பெற்றது.

Update: 2018-02-25 06:31 GMT
“தமிழர்களின் முதல் இசை, பறை! முன்பு கைகளால் தப்பி (தட்டி) இசைத்ததால் தப்பு என்ற பெயர் பெற்றது. தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த இந்த இசைக்கருவி மாட்டின் தோலால் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதை இசைக்கும் முன்பு தீயில் வாட்டி நெகிழச்செய்யவேண்டும். நெகிழ்ந்தால்தான் அதில் இருந்து எழும் இசை கேட்பவர்களின் இதயத்தை இதமாகத்தொடும்” என்கிறார்கள் செ.திவ்யா, கி.பத்மா, ஜெ.லாவண்யா, பெ.மோகனப் பிரியா. இவர்கள் கல்லூரி மாணவிகள். நெரிசலான குடியிருப்புகளைக் கொண்ட ஈரோடு கருங்கல்பாளையம் வண்டிவீரன்கோவில் பகுதியில் இருந்து தமிழகம் முழுவதும் பறை இசையை பரப்ப புறப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களை நாம் சந்தித்த மாலை நேரத்தில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அழகாக கூரைச்சேலையை கட்டிக்கொண்டு அதன்மேல் சிவப்பு நிற துண்டு ஒன்றை இறுக்கிக்கட்டி, பறையை தோள்களில் தொங்கவிட்டு லாவகமாக குச்சிகளால் தட்டித்தொடங்கும்போதே தானாக ஆட்டம் போடுகின்றன நம் கால்கள். அவர்கள் போர்ப்பறை, போட்டிப்பறை, ஆட்டப்பறை என்று ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி இசைக்க அந்த இடமே இசைக்குள் மூழ்கிவிட்டது. பக்க வாத்தியங்கள் இல்லை. வேறு தாள மேளங்கள் இல்லை. இசைக்கருவிகள் இல்லை. ஒற்றைப் பறையில் இருந்து தோன்றும் தப்பட்டை இசை எட்டுத் திக்கும் ஒலிக்கிறது. கேட்பவர்களையும் தாளம்போட வைக்கிறது.

அதுதான், பறையின் பலம் என்று விளக்கம் அளிக்கிறார் கலைத்தாய் அறக்கட்டளையின் தலைவர் மாதேஸ்வரன். இவர்தான் இந்த மாணவிகளின் குரு. இவர், வண்டிவீரன் கோவில் பகுதியில் உள்ள ஏராளமான இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் பலவிதமான கிராமிய கலைகளை கற்றுக்கொடுத்துள்ளார்.

“நான் 7 வயதில் சிலம்ப பயிற்சி பெற்றேன். பின்பு திருப்பூரை சேர்ந்த சாமுவேல் என்பவர் பறையை இசைக்க கற்றுக்கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஒயிலாட்டம், கரகாட்டம், குச்சி ஆட்டம் போன்ற ஏராளமான கிராமியக் கலைகளை கற்றோம். அனைத்தையும் கற்று ஒரு குழுவாக சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளோம்” என்றார் திவ்யா.

“நாங்கள் ஆறாம் வகுப்பு படிக்கும்போது சிலம்பம் கற்றோம். இப்போது எங்கள் கல்லூரித் தோழிகளுக்கு வகுப்பெடுக்கும் அளவுக்கு பயிற்சி பெற்றுவிட்டோம்” என்று மகிழ்கிறார்கள் மோகனப்பிரியாவும், பத்மாவும்.

பொதுவாக ஏதாவது ஒரு கிராமிய கலையில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னொரு கலையில் ஈடுபடுவதில்லை. ஆனால் இந்த மாணவிகள் சிலம்பாட்டத்தில் அதிரவைக்கிறார்கள். கரகாட்டத்திலும் கலக்குகிறார்கள். இவர்களுடன் 9-ம் வகுப்பு மாணவி கோகிலாவும் இணைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.

“அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் செல்வதில்லை என்ற கொள்கையுடன் இருப்பதால் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கேற்கிறோம். தற்போது திருமண வீடுகளிலும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்த எங்களை அழைக்கிறார்கள்” என்று கூறும் மாதேஸ்வரன், பல ஆண்டுகளாக இலவசமாகவே கலைப்பயிற்சி வழங்கி வருகிறார். 5 வயது முதல் சிறுவர் - சிறுமிகள் கலைப்பயிற்சியை தொடங்கலாம் என்கிறார். கலைநிகழ்ச்சிகள் மூலம் வரும் வருவாயை, பங்குபெறும் மாணவ- மாணவிகள் தங்கள் கல்விச் செலவுகளுக்காக பயன் படுத்துகிறார்கள்.

“நான் தொடக்கத்தில் சிலம்பம் கற்றுக்கொள்ளவே பயந்தேன். ஆனால் என்னை உற்சாகப்படுத்தி கற்றுக்கொள்ள வைத்தார்கள். ஒரு முறை பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பப் போட்டியில் நான் வெற்றி பெற்று பாராட்டுபெற்ற பின்புதான் அதன் பெருமையை உணர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன். அடுத்து ஒவ்வொரு கலையாக கற்றுக்கொண்டேன். பெருமளவு மக்கள் திரளும் மேடைகளில் நடனம் ஆடி பாராட்டு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். கலையால், கல்லூரியிலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது” என்கிறார் பத்மா.

“பறை நமது பண்பாட்டின் இசை. எனவே அது நம்மை விரைவில் ஆட்கொண்டுவிடுகிறது. பறை மட்டுமே மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் இசைக்கப்படும் இசைக்கருவியாக உள்ளது. திரு மணம், சடங்குகள், கோவில் திருவிழாக்கள், மரண நிகழ்வுகள் மட்டுமின்றி, பொதுமக்களுக்கு தண்டோரா போடவும் பறை பயன்படுகிறது. வேறு எந்த ஒரு இசைக்கருவியையும் இத்தனை விஷயங்களுக்கு பயன்படுத்த முடியாது. காரணம் பறை என்பது தமிழர்களின் வாழ்வோடு இணைந்தது. குறிப்பாக குறிஞ்சி நிலத்தின் இசைக்கருவியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பறை இசைக்கு இறை சக்தியை ஆட் படுத்தும் ஆற்றல் உண்டு. முன்காலத்தில் கோடை வந்து விட்டால் குறிஞ்சி நிலமான மலைப் பகுதி வறண்டுவிடும். அப்போது மலைப்பகுதியில் வசித்து வந்த மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடுவார்கள். அங்கு பறை இசைப்பார்கள். ஒருவர் பின் ஒருவராக இடைவிடாது பறை இசைக்கும்போது மழை கொட்டும். மழை வந்ததும் அவர்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கு சென்று விவசாயத்தை தொடர்ந்திருக்கிறார்கள். இவ்வாறு ஆண்டுதோறும் அவர்கள் கூடும் இடம் வழிபாட்டு தலமாகவும், பறை இசைத்தல் பண்பாட்டு நிகழ்வாகவும் மாறியது. அதனால்தான் இன்னும் நமது பகுதி களில் மாரியம்மன் விழாக்கள் கோடை காலத்தில் நடைபெறுகிறது.

அதுபோல் அறுவடை காலத்தில் மருதம் நிலத்தில் பறை இசைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வயல்களில் அறுவடை தொடங்கும் முன்பு பறையை இசைத்து க்கொண்டு வயல்களை சுற்றி வருவார்கள். அப்போது வயலுக்குள் இருக்கும் பாம்பு, எலி உள்ளிட்டவை வேறு இடங் களுக்கு தப்பி சென்று விடும். இதன்மூலம் அறுவடையை அச்சமின்றி செய்ய முடியும். இப்படி அனைத்து தரப்பு மக்களுடனும் கலந்த பறை இசையின் துடிப்பு இன்னும் மக்களின் அடி மனதில் தேங்கி க்கொண்டுதான் இருக்கிறது. ஒரு நிகழ்வை பறை இசை ஆட்டத்துடன் தொடங்கினால் அந்த நிகழ்ச்சி முழுவதுமே உற்சாகம் நிறைந்ததாக ஆகிவிடும். தற்போது இளைஞர்கள் மத்தியில் பறை இசை உள்ளிட்ட கிராமிய கலைகளுக்கு பலத்த வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் பாரம்பரிய கலைகளை மீட்டெக்கும் ஆர்வம் இளைய தலைமுறையினருக்கு ஏற்பட்டு இருக்கிறது. நிறைய பேர் பறை இசை கற்க முன்வருகிறார்கள்” என் கிறார் மாதேஸ்வரன்.

பறை இசையில் சிறந்து விளங்கும் மாணவிகள் அனைவருமே தங்கள் கல்லூரிக்காலம் முடிந்த பின்பு, பயிற்சியாளர்களாக மாறி பலருக்கும் கிராமியக்கலைகளை கற்றுக்கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

பரவட்டும் பறை இசை பாரெங்கும்.

மேலும் செய்திகள்