விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-02-24 23:56 GMT
கொள்ளேகால்,

மத்திய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று முன்தினம் சாம்ராஜ்நகர் அருகே சந்தேமரஹள்ளியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த வழியாக செல்லும் பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். முன்னதாக சாம்ராஜ்நகர் தபால் நிலையம் முன்பு இருந்து சந்தேமரஹள்ளி வரை விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர்.

இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் கூறுகையில், மத்திய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை மத்திய அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் தொல்லையால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உணவு அளிக்கும் விவசாயிகளை யாரும் கண்டுகொள்வதில்லை. வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்ற தொழில் அதிபர்களை பிடிக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், விவசாயத்துக்காக கடன் வாங்கிய விவசாயிகள் சாவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்தால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர்செய்தனர்.

மேலும் செய்திகள்