ஆட்டோ, டாக்சி டிரைவர்களை தோப்புக்கரணம் போட வைத்ததால் பரபரப்பு

அதிக கட்டணம், விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஆட்டோ, டாக்சி டிரைவர்களை நவநிர்மாண் சேனாவினர் ரோட்டில் தோப்புக்கரணம் போட வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-02-24 23:17 GMT
மும்பை,

நவநிர்மாண் சேனா கட்சியினர் கடந்த 2 மாதத்திற்கு முன் சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பல இடங்களில் ரெயில் நிலையத்தையொட்டி இருந்த சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளை அடித்து விரட்டினர்.

இந்தநிலையில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரின்பேரில் அவர்களுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளனர்.

நேற்று நவநிர்மாண் சேனா கட்சியினர் முறைகேடுகள், விதிமுறைகளை மீறி செயல்படும் டிரைவர்களை பிடித்து ரோட்டில் தோப்புக்கரணம் போடவைத்தனர்.

மேலும் மீட்டர்களில் தில்லுமுல்லு வேலைகள் செய்து அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோ, டாக்சி டிரைவர்களை பிடித்து மன்னிப்பு கேட்க வைத்து அதை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

இது குறித்து நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுச்செயலாளர் பாலா நந்த்காவோங்கர் கூறும்போது:-

விதிமுறைகளை மீறி தவறு செய்த ஆட்டோ, டாக்சி டிரைவர்களை நாங்கள் தாக்கினோம். பொதுமக்கள் நலனுக்காக தான் இதை செய்தோம். நாங்கள் வெளிமாநிலத்தவர் அல்லது குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என நினைக்கிறோம். மேலும் அவர்கள் பொதுமக்களை கஷ்டப்படுத்த கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நவநிர்மாண் சேனா கட்சியினரால் பாதிக்கப்பட்ட எந்த டிரைவரும் இதுவரை போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. எனவே அந்த கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்