டாக்டர்கள் ஆலோசனைப்படி நடந்தால் சுகப்பிரசவமாகும்

டாக்டர்கள் ஆலோசனைப்படி நடந்தால் சுகப்பிரசவமாகும் என்று கணியம்பாடியில் நடந்த தாய் சேய் நல மருத்துவ முகாமில் கலெக்டர் ராமன் தெரிவித்தார்.;

Update: 2018-02-24 22:45 GMT
அடுக்கம்பாறை,

வேலூரை அடுத்த கணியம்பாடியில், தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. கணியம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலாஜி தலைமை தாங்கினார். வேலூர் தாசில்தார் சி.பாலாஜி, கணியம்பாடி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணியம்பாடி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்திபிரியதர்ஷினி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் ராமன் கலந்துகொண்டு, கர்ப்பிணிகளுக்கு அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தை வழங்கி பேசினார்.

தமிழகம் முழுவதும் பொது சுகாதாரத்துறை சார்பில் பிப்ரவரி 24-ந் தேதி முதல் மார்ச் 6-ந் தேதி வரை மொத்தம் 700 இடங்களில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 30 இடங்களில் இந்த தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்கிறது.

வேலூர் சுகாதார பகுதிகளில் 20 இடங்களிலும், திருப்பத்தூர் சுகாதார பகுதிகளில் 10 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

இதில் கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப கால பரிசோதனை, ரத்த பரிசோதனை, ஸ்கேன், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் மகப்பேறு உதவி கிடைக்கச் செய்வது, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு கவனிப்பு ஆலோசனை உள்ளிட்டவைகள் வழங்கப்படும்.

மேலும் செவிலியர்களும் கிராமந்தோறும் சென்று கர்ப்பிணிகளுக்கு ஆலோசனைகள் வழங்குகின்றனர். முந்தைய காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் இருந்த கவனிப்பும், கண்காணிப்பும் தற்போது இல்லை. இதனால் அரசே கர்ப்பிணிகளுக்கு தேவையான சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ குழுக்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் மருந்து, மாத்திரைகளை முறையாக சாப்பிட வேண்டும். டாக்டர்கள் கூறும் ஆலோசனைகள் படி தாய்மார்கள் நடந்து கொண்டால் சுகப்பிரசவமாகும்.முன்னதாக கலெக்டர் ராமன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்துள்ள உணவுகள் கண்காட்சியை பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்