விவசாயத்தையும், பொதுத்துறையையும் நலிவடைய செய்ய பா.ஜனதா அரசு முயற்சி திருச்சி சிவா குற்றச்சாட்டு

விவசாயத்தையும், பொதுத்துறையையும் நலிவடைய செய்யும் முயற்சியில் பா.ஜனதா அரசு ஈடுபட்டு வருகிறது என திருச்சி சிவா எம்.பி. குற்றம் சாட்டினார்.

Update: 2018-02-24 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் பங்கேற்ற திருச்சி சிவா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–


இந்திய நாட்டின் பொருளாதாரம் சீராக இருப்பதற்கும், உலக அளவில் பெருளாதார சீரழிவு ஏற்பட்டபோது பொருளாதாரத்தில் இந்தியா தலை நிமிர்ந்து நின்றதற்கும் விவசாயத்துறையும், பொதுத்துறை நிறுவனங்களும் தான் காரணம். விவசாயத்துறையையும், பொதுத்துறை நிறுவனங்களையும் நலிவடைய செய்யும் முயற்சியில் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. விவசாயம் புறக்கணிக்கப்படுவதால் விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன பங்குகள் தனியாருக்கு விற்கப்படுகிறது.

இது பொதுத்துறை நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் நடவடிக்கையாகும். எல்.ஐ.சி.யானது 75 சதவீத பங்குகளை தன்வசம் வைத்துள்ளது. பல்வேறு துறைகளில் ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் கோடியை முதலீடு செய்து இருக்கிறது. தனியார் முதலீட்டினால் இந்தியாவிற்கு எந்த லாபமும் கிடைக்காது. பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் அடைந்தால் அதன் பலன் இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் பயன்படும்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் மோடியை சந்திப்பது என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமரை சந்தித்து வலியுறுத்தி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவை அமைக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. காவிரி மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் சரியாக நடத்தாத காரணத்தினால் நமது உரிமையை இழந்து இருக்கிறோம். இருக்கக்கூடிய உரிமையையும் இழந்து விடாமல் மீட்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்றால் அன்புமணி ராமதாஸ் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதுபோல் அவர் பலமுறை கூறி இருக்கிறார். ராஜினாமா செய்வதால் பிரச்சினை தீருமா? என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அனைத்து கட்சியினரும் ஒன்றாக இருந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி வரும் நேரத்தில் இப்படி பேசுவது ஏற்புடையதல்ல.


காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. பணிகளால் விளைநிலம் பாதிக்கப்பட்டு வருகிறது. நெடுவாசல், கதிராமங்கலத்தில் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மாநில அரசு அனுமதியின்றி எந்த பணியையும் மேற்கொள்ள மாட்டோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளை பாதுகாப்பதில் தி.மு.க. முனைப்போடு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் நடந்த முப்பெரும் விழாவிற்கு தஞ்சை கோட்ட தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். இதில் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் பா.ஜனதா அரசு தீவிரமாக இருக்கிறது. எதிர்காலத்தில் இந்திய பொருளாதாரம் செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் பொதுத்துறை நிறுவனங்கள் வலிமையானதாக இருக்க வேண்டும் என்றார்.

இதில் தென்னிந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்க துணைத் தலைவர் சுவாமிநாதன், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணைச் செயலாளர் அறிவுக்கடல் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்