திருச்சி- ஈரோடு இடையே மின்மயமாக்கப்பட்ட பாதையில் முதல் கட்டமாக சரக்கு ரெயில் இயக்கம் தொடங்கியது

திருச்சி- ஈரோடு இடையே மின்மயமாக்கப்பட்ட பாதையில் முதல் கட்டமாக சரக்கு ரெயில் இயக்கம் தொடங்கியது.

Update: 2018-02-24 22:30 GMT
கரூர்,

திருச்சி- ஈரோடு இடையே 141 கிலோ மீட்டர் தூரம் அகல ரெயில் பாதை மின்மயமாக்கும் பணி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கி நடந்து வந்தது. இந்த பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து கடந்த 7, 8-ந் தேதிகளில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் இந்த வழித்தடத்தை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வின் போது பணிகள் திருப்திகரமாக இருப்பதாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தெரிவித்திருந்தார்.

ஆய்வை தொடர்ந்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகத்திற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒரு அறிக்கை அனுப்பி உள்ளார். அதில், திருச்சி- ஈரோடு இடையே மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதையில் முதல் கட்டமாக 6 சரக்கு ரெயில்களை இயக்க வேண்டும். இந்த இயக்கத்தின் போது வழித்தடத்தில் எதுவும் கோளாறு ஏற்படாமல் ரெயில் முழுமையாக இயக்க வேண்டும். அதன்பின் மின்சார என்ஜின் பொருத்தி எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களை இயக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து சிமெண்டு மூட்டைகள் ஏற்றிய சரக்கு ரெயிலில் மின்சார என்ஜின் பொருத்தி கரூர் வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்டது. இந்த சரக்கு ரெயில் வழியில் எந்த பாதிப்பும் இல்லாமல் இயங்கியதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “திருச்சி- ஈரோடு இடையே மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதையில் முதல் கட்டமாக சரக்கு ரெயில் இயக்கம் தொடங்கி உள்ளது. மேலும் 5 சரக்கு ரெயில்களில் மின்சார என்ஜின் பொருத்தி திருச்சி- ஈரோடு இடையே இயக்கப்பட உள்ளது. இந்த 5 சரக்கு ரெயில்கள் இயக்கப்படுவதை சேலம் கோட்ட அதிகாரிகள் முடிவு செய்து ஒவ்வொரு தினத்தை அறிவிப்பார்கள். அந்தந்த தினத்தில் சரக்கு ரெயில் இயக்கப்படும். மின்மயமாக்கப்பட்ட பாதையில் சரக்கு ரெயில்கள் நல்ல முறையில் இயக்கப்பட்ட பின் ரெயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன்பின்பு எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களில் டீசல் என்ஜினுக்கு பதிலாக மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்பட உள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்