எம்.ஜி.ஆர்.சிலையுடன் அனுமதியின்றி திறக்கப்பட்ட ஜெயலலிதா வெண்கல உருவச்சிலை

ஆரணியில் பழைய பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர்.சிலையுடன் அனுமதியின்றி நிறுவப்பட்ட ஜெயலலிதா சிலை திறக்கப்பட்டது. அப்போது தி.மு.க.கல்வெட்டு மற்றும் கொடிகளை அகற்றிவிட்டு இதனை திறந்ததால் கடப்பாரையுடன் தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்து கோஷமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-02-24 23:00 GMT
ஆரணி,

ஆரணி நகரில் பழைய பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர்.சிலை ஒன்று சிமெண்டினால் அமைக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் மற்றும் தலைவர்கள் வருகையின்போது இந்த சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு வந்தது. இந்த சிலையை அகற்றிவிட்டு எம்.ஜி.ஆருக்கு வெண்கலத்தினால் முழு உருவ சிலை அமைக்க அ.தி.மு.க.வினர் முடிவு செய்தனர். இதே இடத்தில் ஜெயலலிதா சிலையும் வெண்கலத்தினால் அமைக்கப்பட்டு 2 சிலைகளையும் ஜெயலலிதா பிறந்தநாளன்று திறக்க அவர்கள் ரகசியமாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து எம்.ஜி.ஆர். சிமெண்டு சிலை அகற்றப்பட்டு வெண்கலத்தினால் ஆன 2 சிலைகள் அமைக்கும் பணி முடிந்து நேற்று முன்தினம் இரவோடு இரவாக அங்கு நிறுவப்பட்டன. ஆனால் இதற்கு அனுமதி ஏதும் பெறப்படவில்லை.

இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்தநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கே அ.தி.மு.க.வினர் அங்கு வந்து 2 சிலைகளையும் திறந்து விட்டனர். தகவல் அறிந்ததும் ஆரணி தாசில்தார் சுப்பிரமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) குணசேகரன், இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, மற்றும் போலீசார், அரசு அதிகாரிகள் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும் வடக்கு மாவட்ட செயலாளருமான ஆர்.சிவானந்தம், நகர செயலாளர் ஏ.சி.மணி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் கே.ஆர்.ராஜன், தலைமை கழக பேச்சாளர் ஆரணி மாலா, ஒன்றிய செயலாளர் வக்கீல் எம்.சுந்தர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கையில் கடப்பாரையுடன் சிலை அமைக்கப்பட்ட இடம் அருகே வந்து, எங்களது தி.மு.க. கொடி கம்பங்கள், கல்வெட்டுகள் அகற்றப்பட்டுவிட்டன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். அப்போது பீடத்தின் அருகே உள்ள நடைபாதையை இடிக்க முயன்றனர்.

போலீசார் இதனை தடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கொடிகம்பங்கள், கல்வெட்டுகள் அமைக்க ஏற்பாடு செய்து தருவதாக அமைச்சரிடமிருந்து தகவல் வந்துள்ளது என போலீசார் கூறினர். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்