குழுமாயி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை

திருச்சி குழுமாயி அம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-02-24 23:00 GMT
திருச்சி,

திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் தொட்டி பாலம் அருகே பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா மிக சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம் ஆகும். குறிப்பாக குட்டிக்குடி திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும்.

இந்த நிலையில் கோவில் பூசாரி நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்து கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கோவிலுக்கு வந்து பார்த்த போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.


இது குறித்து அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து கோவில் பூசாரி மற்றும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விவரம் கேட்டனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கைவிரல் ரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், 3 மாதத்திற்கு ஒரு முறை கோவில் உண்டியல் திறக்கப்படும். அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பு உண்டியல் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது உண்டியல் பணம் திருட்டு போய் உள்ளது. அதில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை, என்று கூறினர்.


கோவில் உண்டியல் திருட்டு போன சம்பவம் குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் நேற்று காலை கோவிலில் கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கோவில் விழா அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் உண்டியல் பணம் திருட்டு போன சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைக்கும் முன்பு அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்