பெருந்துறை சோழீஸ்வரர் கோவில் பகுதியில் ஓட்டலுக்கு ‘சீல்’ வைப்பு

பெருந்துறை சோழீஸ்வரர் கோவில் பகுதியில் இருந்த ஓட்டலுக்கு ‘சீல்‘ வைத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2018-02-24 22:30 GMT
பெருந்துறை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில் வசந்தராயர் மண்டபம் இடிந்து விழுந்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு பழமையான கோவில்களில் ‘திடீர் திடீர்‘ என தீ விபத்துகள் ஏற்பட்டன.

இதனால் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்குள் இருக்கும் கடைகள் மற்றும் அருகில் இயங்கி வரும் கடைகளை அகற்றவேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

ஈரோடு மாவட்டத்திலும் பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்த கடைகள் ஏற்கனவே அகற்றப்பட்டன. இதையடுத்து பெருந்துறை பஸ் நிலையம் அருகே உள்ள சோழீஸ்வரர் கோவில் வளாகத்தில் இயங்கி வந்த கடைகளை அகற்ற ஈரோடு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் முருகையா, பெரிய மாரியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி ரமணி காந்தன், பெருந்துறை செல்லாண்டியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி அருள்குமார் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது கோவில் பகுதியில் இருந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான ஓட்டலுக்கு பெருந்துறை கிராம நிர்வாக அதிகாரி சிவகுமார் முன்னிலையில் அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர். அப்போது ராமசாமி அதிகாரிகளிடம், இப்படி எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் கடையை மூடச்சொன்னால் எப்படி? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு அதிகாரிகள் இது கோர்ட்டு உத்தரவு வேறு எதுவும் செய்ய முடியாது என்று கூறினார்கள்.

அதன்பின்னர் ஓட்டலின் அருகே முத்துசாமி என்பவருக்கு சொந்தமான பேக்கரியை சீல் வைக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது முத்துசாமி, நானே பேக்கரியை காலி செய்துவிடுகிறேன் என்று கூறி கால அவகாசம் கேட்டார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் முத்துசாமிக்கு ஒருநாள் கால அவகாசம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்கள்.

பெருந்துறை சோழீஸ்வரர் கோவிலில் இருந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓட்டல் உரிமையாளர் ராமசாமி, பேக்கரி உரிமையாளர் முத்துசாமி ஆகியோரிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘பல ஆண்டுகளாக இங்கு கடைவைத்து நடத்தி வருகிறோம். இதுவரை எந்த அசம்பாவிதமும் இங்கு நடைபெறவில்லை. முன் அறிவிப்பு, நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல் அதிகாரிகள் சீல் வைக்க வந்தார்கள். நாங்கள் பிழைப்புக்கு என்ன செய்வது‘ என்றார்கள்.

மேலும் செய்திகள்