ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, சேலத்தில் அ.தி.மு.க.வினர் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

Update: 2018-02-24 22:00 GMT
சேலம்,

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, நேற்று சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. அதையொட்டி சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெரியார் சிலை முன்பு இருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு அவைத்தலைவர் பன்னீர்செல்வம் எம்.பி. தலைமை தாங்கினார்.

மாணவர் அணி செயலாளர் சக்திவேல் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் சவுண்டப்பன், பொருளாளர் பங்க் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் பெரியார் சிலையில் இருந்து புறப்பட்டு திருவள்ளுவர் சிலை, கோட்டை மாரியம்மன் கோவில், தலைமை தபால் அலுவலகம் வழியாக அண்ணா சிலை முன்பு முடிவடைந்தது.

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வணங்கினர். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் அண்ணா சிலை அருகே உள்ள சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.எஸ்.சதீஷ்குமார், சேலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர் ஆர்.முருகன், சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ஜான்கென்னடி, சூரமங்கலம் பகுதி அவைத்தலைவர் கிருபாகரன் மற்றும் பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சேலம் ராஜகணபதி கோவிலில், ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. செவ்வாய்பேட்டை விழியிழந்தோர் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது.

சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தங்கச்சங்கிலி மற்றும் வெள்ளிக்கொலுசுகள் பரிசாக வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்