சாணார்பட்டி அருகே பயங்கரம்: மாட்டு வியாபாரி வெட்டிக் படுகொலை
சாணார்பட்டி அருகே மாட்டு வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாணார்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் மார்க்கம்பட்டியில் கோபால்பட்டி–அதிகாரிப்பட்டி சாலையோரத்தில் உள்ள காட்டு பகுதியில் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அவர்கள், சாணார்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
நத்தம் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன், சப்–இன்ஸ்பெக்டர் அபுதல்கா ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் தகவல் அறிந்ததும் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபால் சம்பவ இடத்துக்கு வந்தார். பின்னர் பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்
அவருடைய உடலில் 7 இடங்களில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தன. இதனால் அவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவரின் கால் சட்டையில் ரூ.43 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். பின்னர் திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த படி சிறிது தூரம் ஓடி போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் அதிகாரிப்பட்டியை அடுத்த மார்க்கம்பட்டியை சேர்ந்த அம்பல்ராஜ் (வயது 40) என்பதும், மாட்டு வியாபாரியான இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் முருகேசனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை என்பது தெரியவந்தது
இதையடுத்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அம்பல்ராஜின் அண்ணன் பால்ராஜ் கடந்த 2001–ம் ஆண்டு நில பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அம்பல்ராஜின் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த பாண்டி, ரமேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலை வழக்கின் முக்கிய சாட்சியாக அம்பல்ராஜ் இருந்து வந்தார்
கடந்த சில நாட்களாக, குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும், தங்களுக்கு சாதகமாக சாட்சி கூறுமாறு அம்பல்ராஜிடம் வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அம்பல்ராஜை அவர்கள், தனியாக அழைத்து சென்று கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
மேலும் அம்பல்ராஜுடன் சென்ற முருகேசன் தலைமறைவாகி விட்டார். அவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாட்டு வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.