ஊட்டியில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை இடிக்காமல் பாதுகாக்க வேண்டும்; இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிகள் கோரிக்கை

ஊட்டியில் உள்ள பாரம்பரியமான கட்டிடங்களை இடிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-02-24 22:30 GMT
ஊட்டி,

கோவை மாவட்டத்துடன் நீலகிரி இணைந்து இருந்த காலத்தில், ஆங்கிலேயர்கள் நீலகிரி மாவட்டத்தை தனியாக பிரித்து ஆட்சி நடத்தி வந்தனர். அப்போது இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரை சேர்ந்த முக்கிய நபர்கள் நீலகிரி மாவட்டத்தில் ஆணையாளர், அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளாக பணிபுரிந்து வந்தனர். அந்த காலத்தில் ஊட்டியில் ஸ்டீபன் ஆலயம், புனித தாமஸ் ஆலயம், புனித மரியன்னை ஆலயம் உள்பட பல்வேறு ஆலயங்களையும், அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், குதிரை பந்தய மைதானம், கலெக்டர் அலுவலகம், கல் பங்களா ஆகியவற்றை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர்.

மேலும் ஊட்டியில் மாவட்ட நீதிமன்றம், பிரிக்ஸ் பள்ளி உள்பட பல்வேறு கட்டிடங்கள் லண்டனில் உள்ளதை போன்று வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாரம் பரியம் மிக்க கட்டிடங்கள் இன்று வரைக்கும் பழமையான கட்டிடமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சென்னை மாமல்லபுரம், மைசூரு அரண்மனை ஆகியவற்றை பார்வையிட்டு விட்டு ஊட்டிக்கு வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியின் இயற்கை அழகை கண்டு ரசிக்கிறார்கள்.

ஊட்டிக்கு நேற்று சுற்றுலா வந்த வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களையும், உழவர் சந்தையில் நீலகிரியில் விளையும் மலைக்காய்கறிகள், பழங்களையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இதே போன்று இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா பயணிகளான மிக்கேல் சமல், மேரின், லெஸ்கி, ஹெலன் ஆகிய 4 பேர் நேற்று ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அவர்களும் தாவரவியல் பூங்கா அழகை ரசித்தனர். பின்னர் ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. ஸ்டீபன் ஆலயத்தை பார்வையிட்டு, பின்பகுதியில் அமைந்து உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவர் கல்லறை உள்ளிட்ட தங்களது முன்னோர்களின் கல்லறைகளை தேடி பார்த்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

ஊட்டி குளிர் பிரதேசமாக இருப்பதால், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நாங்கள் ஊட்டியை அதிகமாக விரும்புகிறோம். அமைதியான மாவட்டமாகவும், அழகான மலைப்பிரதேசமாகவும், வனப்பகுதிகள் நிறைந்து வனவிலங்குகள் அதிகளவில் வாழும் இடமாக திகழ்கிறது. இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களை போன்ற சுற்றுலா பயணிகளை கவரும் ஊட்டியில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணி மேரின் கூறிய தாவது:-

நான் கடந்த 1953-ம் ஆண்டு முதல் 1961-ம் ஆண்டு வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவையொட்டி உள்ள ஹெப்ரான் பள்ளியில் படித்தேன். பள்ளி பருவகாலத்தில் ஊட்டியில் வனப்பகுதிகள் அதிகமாகவும், வெள்ளியை உருக்கியதை போன்ற நீரூற்றுகளும், பசுமையான புல்வெளிகளும் அதிகளவில் காணப்பட்டன. அந்த நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை. ஆனால், தற்போது ஊட்டி நகரத்தில் எங்கு பார்த்தாலும் கான்கிரீட் கட்டிடங்களாகவும், வாகனங்களின் பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. ஊட்டி அதன் அழகையும், பொலிவையும் இழந்து வருவது வருத்தத்தை அளிக்கிறது.

காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் இருந்தாலும், இயற்கை அழகு குறையாமல் பாரம்பரிய கட்டிடங்களை இடிக்காமல் பாதுகாக்க வேண்டும். ஊட்டியின் அழகை பாதுகாத்து, சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்