‘காப்பக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை’ கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு

கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-02-24 22:15 GMT
மதுரை,

மதுரையை சேர்ந்த செல்வகோமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை காந்தி மியூசியம் அருகில் சமூக பாதுகாப்புத் துறையின்கீழ் உள்ள அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. கிராமப்பகுதிகளில் பெற்றோரை இழந்த மாணவிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்தனர். இவர்கள் மாநகராட்சி பள்ளியில் படித்து வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் காப்பகம் திறக்கப்பட்டது. இதனால் தங்கள் ஊருக்கு சென்ற மாணவிகள் மீண்டும் காப்பகத்துக்கு திரும்பினார்கள்.

அப்போது காப்பகத்தில் 35 பேர் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களை காப்பகத்தில் தங்க காப்பக நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் வீட்டில் இருந்து பெட்டி படுக்கைகளுடன் வந்த மாணவிகள் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் சிரமப்பட்டனர். 3 நாட்கள் அதே நிலை நீடித்ததால், அவர்களுக்கு காப்பகத்தில் தங்க இடம் அளிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, காந்தி மியூசியம் அருகில் காப்பக கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு விரைவில் ஒப்புதல் பெற வேண்டும். தேவையான நிதியை அரசிடம் இருந்து பெற்று 3 மாதத்தில் கட்டிட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

எனவே மதுரை கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர், சமூகபாதுகாப்பு மண்டல துணை இயக்குனர் தனசேகரபாண்டியன் ஆகியோர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்த தற்போதைய நிலையை தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை மார்ச் 16-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். 

மேலும் செய்திகள்