கலெக்டர் அலுவலகத்தில் நில சீர்திருத்த சட்டம் குறித்து தாசில்தார்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் குறித்து குமரி மாவட்ட தாசில்தார்களுக்கு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2018-02-24 23:00 GMT
நாகர்கோவில்,

மாநிலத்தில் வேளாண் நிலங்கள் குறைந்த அளவிலேயே உள்ளன. எனவே குறிப்பிட்ட சிலரிடம் நிலங்கள் குவிவதை தடுக்கவும், நிலத்தின் மீது உச்ச வரம்பு விதிக்கவும் மற்றும் உச்ச வரம்புக்கு மேற்பட்ட நிலங்களை கையகப்படுத்தி அதை நிலமற்ற ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காகவும் தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டம் குறித்த பயிற்சி முகாம் வருவாய்த்துறை சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில் தாசில்தார்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் பங்கேற்றனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இக்கூட்டத்தில் தனி தாசில்தார்கள் (முத்திரை) திருவாழி, அனில்குமார் மற்றும் பறக்கும் படை தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர். நில சீர்திருத்த சட்டம் தொடர்பாக தாசில்தார் திருவாழி பேசியபோது கூறியதாவது:–

தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களை கிரயம் செய்யலாம்.

அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 1–2–2015 வரை நில சீர்திருத்த உதவி ஆணையர் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதற்கு பிறகு இந்த பணி சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்களுக்கும் நில சீர்திருத்த பயிற்சி அவசியம் என்பதால் அவர்களுக்கும், சென்னையில் பயிற்சி பெற்ற தாசில்தார்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்