நெல்லையில் தொழிலாளி கொலை: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை நாகர்கோவில் விரைந்தது

நெல்லையில் பீர் பாட்டிலால் குத்தி தொழிலாளியை படுகொலை செய்த கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் நாகர்கோவிலுக்கு விரைந்து சென்றுள்ளனர்.

Update: 2018-02-24 20:30 GMT
நெல்லை,

நெல்லையில் பீர் பாட்டிலால் குத்தி தொழிலாளியை படுகொலை செய்த கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் நாகர்கோவிலுக்கு விரைந்து சென்றுள்ளனர்.

பீர் பாட்டிலால் குத்தி கொலை

நெல்லை தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலையில் ரெயில்வே தண்டவாளத்தையொட்டி சுப்பிரமணிய நகர் உள்ளது. இங்குள்ள முட்புதருக்குள் நேற்று முன்தினம் காலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், கழுத்து பகுதியில் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு இருந்தார்.

முந்தைய நாள் இரவு அந்த பகுதிக்கு அழைத்து வந்து மர்ம கும்பல் அவரை கொலை செய்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நாகர்கோவில் விரைவு

கொலை செய்யப்பட்டவரின் கையில் ‘முருகன்‘ என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. இந்த அடையாளத்தை கொண்டும், அந்த பகுதியில் நின்று நீண்ட நேரம் செல்போன் எண்களில் பேசியவர்கள் விவரங்களை சேகரித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். நீண்ட விசாரணைக்கு பிறகு கொலை செய்யப்பட்டவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் பகுதியை சேர்ந்த தொழிலாளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார், தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதா லட்சுமி தலைமையில் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு விரைந்தனர். அவர்கள் நாகர்கோவில் இறச்சகுளம் பகுதியில் முகாமிட்டு உள்ளூர் போலீசார் உதவியுடன் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர். மேலும், அவரை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்