‘அயோடின்’ குறைந்தால்...

அயோடின் இல்லையென்றால் கடுமையான வளர்ச்சி பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம்.

Update: 2018-02-24 07:42 GMT
ப்பில் ‘அயோடின்’ சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. ‘அயோடின்’ ஏன் முக்கியம்? அது பற்றி...

நமது வளர்சிதை ஒழுங்குமுறைக்கான பிரதான பங்கை அயோடின் கொண்டிருக்கிறது. அயோடின் இல்லையென்றால் கடுமையான வளர்ச்சி பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம்.

ஆனால் பெரும்பாலானோருக்கு எவ்வளவு அயோடின் தேவை அல்லது எங்கிருந்து அது வருகிறது என்பது தெரியாது.

பல நவீன உணவுகளில் அயோடின் குறைபாடு உள்ளது என்பதும், கர்ப்பிணிகளுக்கு அயோடின் குறைபாடு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதும் சர்ரே பல்கலைக்கழக ஊட்டச்சத்து மருத்துவப் பேராசிரியர் மார்க்கரெட் ரேமன் நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தைராய்டு ஹார்மோன்களுக்கான முக்கிய அங்கமாகவும், வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றத்துக்கும் முக்கியமானதாகவும் அயோடின் உள்ளது. மூளையின் வளர்ச்சிக்கு, குறிப்பாகக் கருப்பையில் குழந்தைக்கு அயோடின் மிகவும் அவசியம்.

“கர்ப்பிணிப் பெண்கள் போதுமான அயோடினைப் பெறவில்லை என்றால், அவர்களது குழந்தைகள் கற்றல் குறைபாட்டுடன் பிறக்கலாம்” என்று ரேமன் எச்சரிக்கிறார்.

“கற்றல் குறைபாட்டை உண்டாக்கும் காரணிகளில் முதன்மையானதாக அயோடின் குறைபாடே உள்ளது” என்று அவர் கூறுகிறார்.

அயோடினை கொண்டிருக்கும் சிறந்த உணவுகளாக மீனும், முட்டையும் உள்ளன. பெரும்பாலான நாடுகள் உப்பு மூலம் அயோடினை எடுத்துக்கொள்கின்றன. இங்கிலாந்து போன்ற வேறு சில நாடுகள், பால் மற்றும் பால் சார்ந்த உணவுப்பொருட்கள் மூலம் அயோடினை பெறுகின்றன.

ஆனாலும் தொழில்மயமான உலகில், அயோடின் குறைபாடு பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. அயோடின் நிறைந்த உணவுகள் கிடைக்காததால் இது ஏற்படுவதில்லை. மாறாக, மக்கள் தாங்கள் உண்பதற்காகத் தேர்ந்தெடுக்கும் உணவுகளால் இப்பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

நார்வே பொது சுகாதார நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில், அனைத்து வயதினர், பாலினத்தவர் மற்றும் கர்ப்பிணி பெண்களிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டன. பால், முட்டையுடன் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்களிடமும், முட்டை, பால் கூட உண்ணாத சைவ உணவுப் பழக்கத்தினரிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், பால், முட்டைகூட உட்கொள்ளாதவர்களுக்கே அயோடின் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது கண்டறியப்பட்டது.

சைவ உணவு மட்டும் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தைராய்டு வீக்கப் பிரச்சினையும், அவர்களின் குழந்தைகளுக்கு குறைந்த தைராய்டு செயல்பாடும் ஏற்படலாம் என தனது ஆய்வின் அடிப்படையில் ரேமன் கூறுகிறார்.

அத்துடன் அயோடின் குறைபாட்டால், குழந்தைகள் குறைவான பொதுஅறிவுத் திறன் மற்றும் கற்றல் திறன் கொண்டிருக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

சரி, ஒவ்வொருவரும் தினமும் எவ்வளவு அயோடின் எடுத்துக்கொள்ள வேண்டும்?

பெண்கள் நாள் ஒன்றுக்கு 150 முதல் 300 மைக்ரோகிராம் அயோடினும், ஆண்கள் 150 மைக்ரோகிராம் அயோடினும் எடுத்துக்கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஒவ்வோர் உணவிலும் அயோடின் அளவு வேறுபடுகிறது. எனவே, எவ்வளவு உணவு சாப்பிட்டால், போதுமான அயோடினைப் பெற முடியும் என்று வரையறுப்பது கடினம்.

ஆரோக்கியமாக இருப்பதற்குச் சிறந்த வழி, பல்வேறு உணவுகளைச் சாப்பிடுவதுதான். அதிலும், நாம் பயன்படுத்தும் உப்பில் அயோடின் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். 

மேலும் செய்திகள்