முதியோர் இல்லத்தில் மத்திய உளவுத்துறையினர் ஆய்வு

பிணத்தை ஏற்றிச்சென்ற வேன் சிக்கிய விவகாரம் தொடர்பாக முதியோர் இல்லத்தில் மத்திய உளவுத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2018-02-23 22:55 GMT
உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரம் பகுதியில் இறக்கும் நிலையில் உள்ள ஆதரவற்ற முதியவர்களை பராமரிக்கும் புனித ஜோசப் ஹாஸ்பீசஸ் என்ற பெயரில் அனாதைகள் கருணை இல்லம் உள்ளது.

கடந்த 20-ந்தேதி அந்த இல்லத்திற்கு சொந்தமான வேனில் காய்கறிகளுடன் ஒரு பிணமும் எடுத்து வரப்பட்டது.

அப்போது அந்த வேனில் வந்த வயதான ஆண் மற்றும் பெண் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டதையொட்டி பொதுமக்கள் அந்த வேனை மடக்கிப்பிடித்து சாலவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வேன் டிரைவரான ராஜேஷ் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.

இதையொட்டி அந்த பகுதி மக்கள் முதியோர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ, தாசில்தார் அகிலாதேவி மற்றும் சுகாதாரத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளும் முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு அதன் நிர்வாகி தாமஸ் என்பவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில் நேற்று, அந்த இல்லத்தில் மத்திய உளவுத்துறையினர் ஆய்வு மேற்கொண்டார்கள். மதம் தொடர்பான பிரச்சினை ஏதேனும் ஏற்படலாம் என்ற கோணத்தில் மத்திய உளவுத்துறையினர் இந்த ஆய்வில் ஈடுபட்டதாக தெரிகிறது.

தாசில்தார் அகிலாதேவியிடம் கேட்டபோது, அந்த இல்லத்தில் இறந்து போகும் முதியவர்கள் குறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிப்பதில்லை. ஆகவே வருவாய்த்துறை சார்பில் முதியோர் இல்ல நிர்வாகிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்