காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் சேலம் புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள கலைஞர் மாளிகை வீரபாண்டியார் அரங்கில் நடைபெற்றது.

Update: 2018-02-23 22:15 GMT
சேலம்,

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட இலக்கிய அணியின் முன்னாள் அமைப்பாளர் முல்லை பெ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா கலந்துகொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் மார்ச் 1-ந் தேதி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சேலம் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சி என அனைத்து பகுதிகளில் சிறப்பாக கொண்டாடி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். அடுத்த மாதம் 24, 25-ந் தேதிகளில் ஈரோட்டில் நடைபெறும் கொங்கு மண்டல மாநாடு பற்றிய சிறப்புகளையும் மக்களுக்கு விளக்கிடும் வகையில் கூட்டங்கள் நடத்திட வேண்டும்.

காவிரி நதிநீர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள இறுதி தீர்ப்பில் கர்நாடகம், தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளது. இது காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டிருந்த அளவை காட்டிலும் குறைவானது ஆகும். மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னதுரை, தமிழ்செல்வன், முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்