பாறைகளாக காட்சி அளிக்கும் காவிரி ஆறு

தண்ணீர் குறைந்ததால் தேவூர் பகுதியில் ஓடும் காவிரி ஆறு பாறைகளாக காட்சி அளிக்கிறது.

Update: 2018-02-23 22:00 GMT
தேவூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காவிரி ஆற்றில் பாய்ந்தோடுகிறது. மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, வேலாத்தா ஆகிய நீர்மின் நிலையங்களை கடந்து திருச்சி நோக்கி செல்கிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய அளவு மழை பெய்யாததாலும், கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து விட்டது.

இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெள்ளமாக பாய்ந்தோடிய காவிரி ஆற்றில் தற்போது குறைந்த அளவே தண்ணீர் ஓடுகிறது. இதன்படி தேவூர் அருகே கோனேரிப்பட்டி, கல்வடங்கம், கோம்புக்காடு ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்து ஆங்காங்கே பாறைகளாக காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் தேவூர் பகுதியில் பாறை இடுக்குகளில் தேங்கி இருக்கும் தண்ணீரில் மீன்களை பிடிக்கும் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஆறால் மீன்கள் அதிகளவில் கிடைக்கிறது. இவை ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.170 வரை விற்பனை செய்கிறார்கள். சிலேப்பி மீன்கள் ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனையாகிறது. இவற்றை காவேரிப்பட்டி, வெள்ளாளபாளையம், கோனேரிப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாங்கிச்செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் மீன்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்