பொதுக்கூட்டத்தில் நாளை பிரதமர் பங்கேற்பு: பொதுமக்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது

புதுவையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு வரும் பொதுமக்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-02-23 22:45 GMT
புதுச்சேரி,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆரோவில் பொன்விழாவில் பங்கேற்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருகிறார். இந்த விழாவில் கலந்து கொள்ளும் அவர் லாஸ்பேட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்திராகாந்திக்கு பின்னர் எந்த பிரதமரும் புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் பேசியதில்லை.

40 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திரமோடிதான் புதுவை பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இந்த கூட்டத்தில் புதுவை மற்றும் தமிழக பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்கின்றனர். இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெறும்.

பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பொதுக்கூட்ட மேடைக்கு அருகிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பேச்சை கேட்க வரும் பொதுமக்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும் வரலாம்.

புதுவை அருகே உள்ள ஆரோவில்லும் புதுவைக்கு பெருமை சேர்க்கிறது. புதுவைக்கு எந்த வகையில் முடியுமோ அதன்படி மத்திய அரசு உதவி செய்து வருகிறது. புதுவை துறைமுக திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பேட்டியின்போது புதுவை மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்