தென்கரை வாய்க்காலில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்

மாயனூர் தடுப்பணையில் இருந்து தென்கரை வாய்க்காலில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2018-02-23 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். மொஞ்சனூர் சந்திரசேகர் பேசுகையில், “புல்வெட்டும் கருவி, மினி டிராக்டர், பவர்டில்லர் போன்ற கருவிகள் மானிய விலையில் வழங்க வேண்டும்” என்றார்.

சின்ன தேவன்பட்டி தெற்கு பகுதியை சேர்ந்த தங்கவேல் பேசுகையில், “எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையின் படி விவசாய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தரகம்பட்டி கால்நடை மருந்தகத்திற்கு கால்நடை மருத்துவர் நியமிக்க வேண்டும். கடவூர் பகுதியில் ஒரு சில ஏரிகளை நீரேற்றி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளின் வழியே செல்லும் குடிநீர் குழாய்களில் இருந்து ஏரிகளை நிரப்ப வேண்டும்” என்றார்.

கீழவெளியூர் ராஜூ பேசுகையில், “கல்லடை கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்” என்றார். அனஞ்சனூர் பரமசிவம்பிள்ளை, மாயனூர் தடுப்பணையில் இருந்து தென்கரை வாய்க்காலில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றார். குப்பமேட்டுப்பட்டி தங்கவேல் அரவக்குறிச்சி நாகம்பள்ளி தடுப்பணையின் உயரத்தை அதிகப்படுத்திட வேண்டும் என்றார்.

வேலம்பாளையம் பூபதி மின் பாதை அமைக்கப்பட்டதால் விளை நிலத்திற்கு நில இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றார். கோரக்குத்தி சுப்புராமன் மணவாசி அருகே அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து வெளிப்படும் கழிவுகளால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேபோல விவசாயிகள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். மேலும் கலெக்டர் கோவிந்தராஜ் பணியிட மாறுதலாகி சென்னைக்கு செல்வதால் அவரை வாழ்த்தி விவசாயிகள் பலர் பேசினர். மேலும் கோரிக்கைகள் பல நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தனர். கூட்டத்தில் கலெக்டர் கோவிந்தராஜ் பேசியதாவது:-

வேளாண் எந்திரங்களை மானிய விலையில் வாங்குவது குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும். வெறும் பதில் மனுவை மட்டும் அனுப்ப கூடாது. ஏரிகளை நீரேற்றி மூலமும், குடிநீர் குழாய்கள் மூலம் நிரப்புதல் என்பது புதுவிதமான யோசனை தான். இதனை அதிகாரிகள் திட்டமாக தயாரித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் ஒரு திட்டம் செயல்படுத்த முடியும். தொழில் நுட்ப ரீதியாக செயல்படுத்த முடியாது என்பது கூறுவதில் பயன்இல்லை. ஏரி நிரம்பினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். குடிநீர் பிரச்சினை ஏற்படாது. எனவே இதனை ஒரு திட்டமாக தயாரித்து அரசுக்கு அதிகாரிகள் அனுப்ப வேண்டும்.

கல்லடை கிராமத்தில் கால்நடை கிளை மருத்துவமனை அமைக்க அரசிடம் இருந்து ஆணை பெறப்பட்டுள்ளது. விரைவில் புதிய கிளை தொடங்கப்படும். மாயனூர் தடுப்பணை மூலம் நீர் ஆதாரம் பெருகி உள்ளது. இந்த தடுப்பணை மூலம் மற்ற இடங்களில் தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாயனூர் தடுப்பணையில் இருந்து கட்டளை மற்றும் தென்கரை வாய்க்கால்களில் கடந்த 8-ந் தேதி வரை சீராக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். நாகம்பள்ளி தடுப்பணையின் அளவை உயர்த்த மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மின் பாதை அமைக்கப்பட்ட நிலங்களில் உரிய இழப்பீடு தொகை வழங்கப்படும். மணவாசி அருகே தனியார் நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உதவி கலெக்டர் மற்றும் சுற்றுச்சூழல் மாவட்ட பொறியாளர் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள்.

கூட்டத்தில் வேளாண்மை துறை இணை இயக்குனர் பாஸ்கரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயந்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் நெல் 10 ஆயிரத்து 947 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுதானிய பயிர்கள் 22 ஆயிரத்து 829 ஹெக்டரும், பயறு வகைகள் 12 ஆயிரத்து 29 ஹெக்டரும், எண்ணெய் வித்து பயிர்கள் 8 ஆயிரத்து 328 ஹெக்டரும், தோட்டக்கலை பயிர்கள் 16 ஆயிரத்து 824 ஹெக்டரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்