போதை பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

தர்மபுரியில் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

Update: 2018-02-23 21:30 GMT
தர்மபுரி,

தர்மபுரியில் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறையின் சார்பில் மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடந்த இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கலால் உதவி இயக்குனர் மல்லிகா தலைமை தாங்கினார். விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் நடராஜன், கல்லூரி முதல்வர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஊர்வலத்தில் மாணவ-மாணவிகள் மதுவால் ஏற்படும் தீமைகள், உடல்நல பாதிப்புகள், போதை பொருட்களால் ஏற்படும் பல்வேறு வகையான மனநல மற்றும் உடல்நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நடந்து சென்றனர். முக்கிய சாலைகள் வழியாக சென்ற இவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது தொடர்பாகவும், சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள், சமூக பிரச்சினைகள் குறித்தும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், தாசில்தார் பழனியம்மாள், இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, செந்தமிழ்செல்வம் மற்றும் கல்லூரி, பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் திரளாக பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்