பொய் வழக்கில் கைதானவருக்கு ரூ.11½ லட்சம் இழப்பீடு: தனிநீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை

கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த அனுமோகன்.

Update: 2018-02-23 22:00 GMT

மதுரை,

கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த அனுமோகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், போலீசார் பொய் வழக்கு போட்டு என்னை 230 நாட்கள் ஜெயிலில் அடைத்தனர். இதற்காக எனக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி கே.கே.சசிதரன், மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.11 லட்சத்து 50 ஆயிரத்தை உரிய வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டார்.

ஆனால் கோர்ட்டு விதித்த கெடுவுக்குள் மனுதாரருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அதேபோல அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், தனிநீதிபதியின் உத்தரவானது அடிப்படை காரணமின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், தனிநீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இந்த வழக்கிற்காக அரசு தரப்பில் ரூ.2 லட்சத்தை 3 வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்