தேனியில் பரபரப்பு: அ.தி.மு.க.-தினகரன் அணி பேனர்கள் கிழிப்பு

தேனியில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. மற்றும் தினகரன் அணி தரப்பில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-02-23 22:00 GMT
தேனி,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பிலும், தினகரன் அணி சார்பிலும் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. தேனி நகரில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், தேனி-பெரியகுளம் சாலையில் வைக்கப்பட்டு அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட 3 பேனர்களும், தினகரன் அணியினர் வைத்த 2 பேனர்களும் நேற்று காலையில் கிழிக்கப்பட்டு இருந்தன. அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட பேனர்களில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்கள் கிழிக்கப்பட்டு இருந்தன. தினகரன் அணி தரப்பில் வைக்கப்பட்ட பேனர்களில் சசிகலா, தினகரன் ஆகியோரின் படங்கள் கிழிக்கப்பட்டு இருந்தன.

இதை அறிந்த அ.தி.மு.க.வினரும், தினகரன் அணியினரும் தங்கள் பேனர் கிழிக்கப்பட்ட இடத்துக்கு வந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பேனர்களை கிழித்தது யார்? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதாக கூறி சாலையோரம் நின்ற கட்சியினரை போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், சம்பந்தப்பட்ட பேனர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்