போலி பெயரில் வங்கி கணக்கு தொடங்கி மோசடி: நடிகை சுருதி மீது மேலும் ஒரு வழக்கு

கோவை பட்டதாரி பெண்ணின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி ரூ.1¼ லட்சம் மோசடி செய்த நடிகை சுருதி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Update: 2018-02-23 23:00 GMT
கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சுருதி (வயது 23). இவர் ஆடி போனா ஆவணி என்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் அந்த படம் வெளிவரவில்லை. இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை குறிவைத்து அவர்களை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன.

இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த என்ஜினீயர் பாலமுருகன் கோவை சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நடிகை சுருதி, அவருடைய தாயார் சித்ரா, வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் நடிகை சுருதி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் மற்றும் சென்னை, நாகை, கடலூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு நகரங்களை சேர்ந்த வெளிநாட்டில் வேலை பார்க்கும் என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கைதான சுருதியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர் பலரிடம் ஏமாற்றிய பணத்தை எந்த வங்கியில் சேமித்து வைத்து உள்ளார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் சுருதி பணம் எடுத்தது தெரிய வந்தது.

உடனே சைபர்கிரைம் போலீசார் அந்த வங்கிக்கு சென்று விசாரனை நடத்தினார்கள். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. கோவை பட்டதாரி பெண் ஒருவரின் பெயரில் போலி ஆவணங்களை பயன்படுத்தி நடிகை சுருதி மிகவும் சாதுர்யமாக பணம் எடுத்தது தெரியவந்தது.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

வெளிநாட்டில் வேலை பார்க்கும் என்ஜினீயர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சுருதி விரித்த வலையில் பல இளைஞர்கள் சிக்கினார்கள். அவர்கள் அனுப்பும் பணம் தன்னுடைய வங்கி கணக்கிற்கு வந்தால் தாம் சிக்கிக் கொள்வோம் என்பதால் போலி பெயரில் நடிகை சுருதி வங்கி கணக்கு தொடங்கியுள்ளார்.

இதற்காக நடிகை சுருதி, மைதிலி என்ற பெயரில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், தங்களுக்கு பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களின் தொடர்பு இருப்பதால் என்ஜினீயரிங் தகுதி உள்ளவர் களுக்கு வேலைவாங்கி தரப்படும் என்றும் ஆன்லைனில் தகவல் அனுப்பினார்.

இதை பார்த்து விட்டு துடியலூரை சேர்ந்த அனுப்பிரியா (வயது 23) என்ற பட்டதாரி பெண் மைதிலியை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டார். அவரிடம், மைதிலி என்ற சுருதி ஆவ ணங்களை அனுப்புமாறு கூறினார். அதன்பேரில் அனுப்பிரியா தனது போட்டோ, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஆன்லைனில் மைதிலிக்கு அனுப்பினார். அதன் பின்னர் அவருக்கு வேலை குறித்த தகவல் எதுவும் வரவில்லை. இதனால் அனுப்பிரியாவும் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்.

ஆனால் அனுப்பிரியாவின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி மைதிலி என்ற சுருதி கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க கொடுத்தார். அதை சரி பார்த்த வங்கி நிர்வாகத்தினரும் அனுப்பிரியாவின் பெயரிலேயே வங்கி கணக்கு தொடங்கி கொடுத்தனர். அதில் தற்காலிக முகவரி என்று பாப்பநாயக்கன் பாளையம் விலாசத்தை சுருதி கொடுத்துள்ளார்.

அதன்பிறகு அனுப்பிரியாவின் பெயரில் இருந்த வங்கி கணக்கை சுருதி பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் தன் பெயரில் வங்கி கணக்கு இருப்பது அனுப்பிரியாவுக்கு தெரியாது. அந்த வங்கி கணக்கிற்கு வெளிநாட்டு என்ஜினீயர்கள் அனுப்பிய ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை சுருதி எடுத்துள்ளார். அந்த பணத்தை எடுப்பதற்கு அனுப்பிரியா என்றே சுருதி கையெழுத்து போட்டுள்ளார்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் அனுப்பிரியாவுக்கு தகவல் கொடுத்த பிறகு தான் தனது பெயரில் வங்கி கணக்கு இருப்பதே அவருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக அனுப்ரியா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சுருதி, இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட அவருடைய தாயார் சித்ரா, வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இவர்கள் மீது மோசடி, கூட்டு சதி, போலி ஆவணங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் நடிகை சுருதி மீது 3 வழக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்