பிச்சை எடுத்து பள்ளிக்கூடங்களுக்கு உபகரணங்கள் வாங்கி கொடுக்கும் முதியவர்

குடும்பத்தினர் வெறுத்து ஒதுக்கியதால் பிச்சை எடுத்த பணத்தில் பள்ளிக்கூடங்களுக்கு உபகரணங்களை முதியவர் வாங்கிக் கொடுத்து வருகிறார்.

Update: 2018-02-23 21:30 GMT
ராதாபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 68). இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சரஸ்வதி கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து பூல்பாண்டி தனது பிள்ளைகளை கவனித்து, அவர்களை நல்ல இடங்களில் திருமணம் செய்து கொடுத்தார். நாளடைவில் பிள்ளைகள் இவரை வெறுக்க தொடங்கியதால் பூல்பாண்டி வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதனால் அவர் மனவேதனையில் காணப்பட்டார். கையிலும் பணம் இல்லாததால் பசி அவரை வாட்டியது. இதனால் அவர் பல்வேறு இடங்களில் பிச்சை எடுக்க தொடங்கினார். அதில் நிறைய பணம் கிடைத்தது. ஆனால் பிள்ளைகள் வெறுத்து ஒதுக்கியதால் வேதனையில் இருந்த பூல்பாண்டி வயதாவதால் அந்த பணத்தை வைத்து என்ன செய்ய போகிறோம் என்று நினைத்தார்.

அப்போது, அவரது மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. நான் பிச்சை எடுத்த பணத்தை எல்லாம் அரசு பள்ளிக்கூடங்களுக்கு பேனா, பென்சில், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கிக் கொடுக்கலாம் என்று முடிவு எடுத்தார். அதன்படி அவர் பல்வேறு ஊர்களில் பிச்சை எடுத்து வந்த பணத்தை அரசு பள்ளிக்கூடங்களுக்கு உபகரணங்களை வாங்கிக் கொடுத்தார். அவர் நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களிலும், புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கும் உபகரணங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடத்துக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள், பாளையங்கோட்டை மாநகராட்சி புதிய நடுநிலைப்பள்ளிக்கூடத்துக்கு கல்வி உபகரணங்கள், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளிக்கு சாப்பாடு தட்டு, தம்ளர், திருச்சி தா.பேட்டை அரசு பள்ளிக்கூடத்துக்கு புத்தகங்கள், விராலிமலை அரசு தொடக்கப்பள்ளி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் எலுமிச்சங்காய் பாளையம் பள்ளி, நாகப்பட்டினம், நெல்லிக்குப்பம், புதுச்சேரி புல்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளுக்கு உபகரணங்களை வழங்கி உள்ளார்.

இதுகுறித்து பூல்பாண்டியிடம் கேட்ட போது, நான் மும்பை செம்பூர் சடாநகரில் இருந்த போது பொதுவாழ்வில் எனக்கு ஈடுபாடு அதிகமானது. அதன்படி அங்குள்ள தெருக்களை சுத்தம் செய்தல், சாலையோரங்களில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளேன். மும்பையில் இருந்த போது, எனக்கு எழுத படிக்க தெரியாது. அங்கு தினமும் நான் முதலில் சென்று ‘தினத்தந்தி‘ நாளிதழ் வாங்குவேன். இதனால் எனது பெயரை தந்தி அண்ணா என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ‘தினத்தந்தி‘யை பார்த்து நான் எழுத படிக்க கற்றுக்கொண்டேன். மேலும் பெருந்தலைவர் காமராஜர் மீது உள்ள பற்றால் தான், நான் பிச்சை எடுத்த பணத்தை எல்லாம் சேமித்து பள்ளிக்கூடங்களுக்கு உதவி செய்து வருகிறேன் என்றார்.

மேலும் செய்திகள்